சென்னை:புதுடெல்லியிலிருந்து நேற்று சென்னை வந்த பிரதமரிடம் 16 பக்கங்களை கொண்ட கோரிக்கை மனுவை அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பெரியார் அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சி எதையும் செய்யக்கூடாது என கேரள அரசுக்கு அறிவுரை கூற கோரிக்கை விடுத்தார்.
நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை ஜெயலலிதா ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்பொழுது அவர் பல விஷயங்கள் குறித்து பேசிவிட்டு 16 பக்கங்களை கொண்ட கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் அளித்தார்.
அம்மனுவில் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
உச்ச நீதிமன்றம் 27.2.2006-ல் அளித்த தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்க கேரள அரசு ஒப்புக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட அணையானது பாதுகாப்பானதாக இருப்பதால், புதிய அணை கட்டும் எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என கேரள அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி, மீதியுள்ள பலப்படுத்தும் பணிகளுக்கும், வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்கும் கேரள அரசு இடையூறு ஏதும் செய்யாமல் இருப்பதுடன், அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுரை கூற வேண்டும்.
இந்த அணைக்காக தமிழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றவும் கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை மற்றும் குத்தகைக்கு வழங்கிய இடத்தில் அத்துடன் இணைந்துள்ள கட்டுமானங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஆபத்து நேரிட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட நிபுணர் குழுவை அமைக்க பிறப்பித்த அறிவிப்பாணையை வாபஸ் பெற வேண்டும்.
மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவில் உள்ள அம்சங்களை அமல் செய்தால் மாநில அரசுக்கு கூடுதலாக ரூ.1,800 கோடி நிதிச் சுமை ஏற்படும். இதில் மத்திய அரசு எந்த பங்களிப்பும் தராது.
மேற்படி மசோதாவின் அம்சங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், ஏற்க முடியாததாகவும் உள்ளன. தமிழகத்துக்கு இப்போது அளிக்கப்படும் அரிசி மற்றும் உணவு தானிய ஒதுக்கீட்டு அளவை தொடர்ந்திட வேண்டும். மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவையும் பழைய நிலை அளவுக்கு உயர்த்திட வேண்டும். மக்களுடன் நெருங்கிய தொடர்பில் மாநிலங்கள் இருக்கக் கூடிய கூட்டாட்சி முறையில், மக்கள் நலத் திட்டங்களை உருவாக்கும் பொறுப்பை மாநிலங்களிடமே விட்டுவிடுவதுதான் சிறந்ததாக இருக்கும். எனவே தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா வரம்பில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழக அரசுக்கு இப்போது 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையும் உள்ளது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே, மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க முன் வரவேண்டும். மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்பு நிதி அளித்ததுபோல பின்தங்கிய மாநிலங்களுக்காக அளிக்கப்படும் நிதி அல்லது அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக அளிக்கப்படும் சிறப்பு நிதியாக மத்திய அரசு கொடுக்க முன் வரவேண்டும்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அல்லது விஷமிகள் தாக்குவதை தேசிய பிரச்னையாகக் கருத வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக இதைக் கருத வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்.
2012 ஜனவரியில் இலங்கையுடன் பேச்சு நடக்கும்போது, இதுகுறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக உள்ள மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
Post a Comment