புயல் மழையால், டெல்டா மாவட்டங்களில், 48 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களின் மதிப்பைக் கணக்கிட, விவசாயத் துறை அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில், நெற்பயிர்கள் காற்றில் சாய்ந்தும், சில பகுதிகளில் நீரில் மூழ்கியும் உள்ளன.
திருவாரூர், நாகை, தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில், 3 லட்சத்து 45 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களில், 48 ஆயிரத்து 420 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதுவரை, வேளாண் துறைக்கு வந்த தகவல்படி, கடலூர் மாவட்டத்தில் தான், பெருமளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இது தவிர, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களின் சேத நிலவரத் தகவல் நாளை மறுநாள் வர உள்ளது.
இதுகுறித்து, விவசாயத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ""வரும் ஜனவரி மாத முதல் வாரத்தில், அறுவடைக்கு தயாரான நிலையில், நெற்பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளது பற்றி, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எவ்வளவு இழப்பீடு அரசு வழங்கும் என்பது, இனிமேல் தான் தெரியவரும்'' என்றார். மேலும், ""புயல் கடலை கடந்த பிறகு பெய்த மழையால், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கணக்கிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை காரணமாக, பாதிப்பான நெற்பயிர்களின் மதிப்பை கணக்கிடுவதில், சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.
Post a Comment