குளச்சலில் விசைப்படகு கல் வீசி உடைப்பு; அதிகாரியை மீனவர்கள் சிறைபிடித்தனர்

குளச்சல், செப்.16
குளச்சலைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், சில மீனவர்களும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இன்று காலை அவர்கள் குளச்சல் துறைமுகம் நோக்கி கரை திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது கடியப்பட்டணத்தைச் சேர்ந்த வள்ளம் மீனவர்கள் சிலர், ஜெகன்ராஜின் விசைப்படகு தடையை மீறி 25 மைல் கல்லுக்குள் உட்பட்ட பகுதியில் மீன் பிடிப்பதாக மீன் வளத்துறை உதவி இயக்குனர் ரூபர்ட் ஜோதியிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து ரூபர்ட் ஜோதி, கடலோர பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் விசைப்படகு தடையை மீறி மீன் பிடிக்கிறதா? என்பதை பார்ப்பதற்காக ஒரு படகில் சென்றனர்.
அதற்குள் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த வள்ளம் மீனவர்கள் ஜெகன்ராஜீன் விசைப்படகை கல் வீசி தாக்கினர். இதில் விசைப்படகின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இதுபற்றி குளச்சல் விசைப்படகு மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கடற்கரையில் திரண்டனர். அப்போது கரைக்கு வந்த ரூபர்ட் ஜோதியை அவர்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விசைப்படகை கல்வீசி தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது ரூபர்ட் ஜோதி, சைமன்காலனியில் உள்ள மீன் வளத்துறைக்கு வாருங்கள். அங்கு பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறினார். ஆனால் அங்கேயே தீர்வு காணவேண்டும் என விசைப்படகு மீனவர்கள் சொன்னார்கள்.
தகவல் அறிந்த குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை பெலிக்ஸ், மீனவர்களுடன் பேச்சுவார்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினார். பின்னர் மீனவர்கள் அனைவரும் மீன்வளத்துறை அலுவலகம் சென்றனர். அங்கு அவர்களுடன் மீன் வளத்துறை உதவி இயக்குனர் ரூபர்ட் ஜோதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Post a Comment