சென்னை, செப். 16-
சென்னையில் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை தடுக்க இணை கமிஷனர் ரவிக்குமார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வாகன சோதனையில் ஈடுபடும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அபராத தொகையை தவிர கூடுதலாக பணம் வைத்திருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி அவர்களுக்கு பணம் தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வைத்துக்கொள்ளலாம்.
கடந்த சில மாதங்களாக, கூடுதலாக பணம் வைத்திருந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வாகன சோதனையின்போது ரூ.3 ஆயிரம் லஞ்சப் பணத்துடன் எழும்பூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சிக்கினார். போக்குவரத்து போலீஸ் துறையில் செயல்பட்டு வரும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது கையும் களவுமாக அவர் சிக்கினார்.
ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனத்தில் வந்த ஒருவரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சப்- இன்ஸ்பெக்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபற்றி துறை ரீதியிலான விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
home
Home
Post a Comment