குடியாத்தம் அருகே வீட்டில் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி: 4 பேர் படுகாயம்

குடியாத்தம், செப்.15-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமி அடுத்த பொம்மனாங்குளத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது43). விவசாயி. இவருக்கு முனியம்மாள் (38) என்ற மனைவியும், லோகேஸ்வரி (16), கோட்டீஸ்வரி (13), பரமேஸ்வரி (12), என்ற மகள்களும், ரங்கநாதன் (8) என்ற மகனும் உள்ளனர்.
குமரேசனின் வீடு மலையடிவாரத்தை ஓட்டியவாறு உள்ள நிலத்தில் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பலரது வீடுகள் ஆங்காங்கே வெகு தூர இடைவெளியில் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் குமரேசன் வீட்டில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. இந்த வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டுள்ளது.
வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து கிராம மக்கள் விரைந்து சென்று பார்த்த போது குமரேசனின் மாடி வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்தது. இடிபாட்டுக்குள் குமரேசன் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி முனியம்மாள், மகள்கள், லோகேஸ்வரி, கோட்டீஸ்வரி, மகன் ரங்கநாதன் ஆகியோர் படுகாயங்களுடன் கிடந்தனர்.
பின்னர் அவர்களை கிராம மக்கள் மீட்டு 108 ஆம்புலன் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முனியம்மாள் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். வெடிவிபத்து நடந்த போது குமரேசனது மகள் பரமேஸ்வரி வீட்டிற்கு வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
மலையடிவாரத்தையட்டி குமரேசன் நிலம் உள்ளதால் அடிக்கடி அந்த நிலத்தில் காட்டுப்பன்றிகள் மட்டும் காட்டு விலங்குகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. அதனை தடுக்க குமரேசன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் வீடு இடிந்து பலியானதாகவும் தெரியவந்துள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. கணேசமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Post a Comment