மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மதுரை ஆதீனம் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுக்க பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது.
இந்த ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா-வை 292 வது மதுரை ஆதீனம் அருணகிரி நியமித்துள்ளார். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார் நித்யானந்தா. மேலும் ரூ 4 கோடியை மதுரை ஆதீனத்துக்கு காணிக்கையாக தருவதாகவும் அறிவித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவை மடாதிபதியாக நியமித்துள்ளதற்கு தமிழகத்தில் உல்ள பல்வேறு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மத்திய அரசின் வருமான வரித்துறை மதுரை ஆதீனத்தில் இன்று காலை முதல் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
விசாரித்ததில், தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மடத்தில் 5 அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ரெய்டால் மதுரை ஆதீனம், நித்யானந்தா ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வருமான வரித்துறையின் அதிரடி சோதனை மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
Post a Comment