தி.மு.க.வுக்குள் தற்போது இருப்பது புயலுக்கு முந்திய அமைதி என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். புயல் டில்லியில் மையம் கொண்டுள்ளது. அது எந்த நேரமும் தெற்கு நோக்கி நகர்ந்து வந்து, சென்னையில் கோபாலபுரத்தைத் தாக்கலாம். அப்போது 'சோ' வென கண்ணீர் மழை பொழியும்.
டில்லியில் மையம் கொண்டுள்ள புயல் கனிமொழி!
கனிமொழியின் சமீபத்திய சென்னை விஜயங்கள் அவரிடம் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவருடன் பேசியவர்கள் சொல்கிறார்கள். அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையில் கொண்டாடப்பட்ட போது, டில்லியில் இருந்து கிரீன் சிக்னல் கொடுத்ததே அவர்தான் என்றும் சொல்கிறார்கள்.
கட்சி ரீதியான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பது 1970-களில் இருந்தே தி.மு.க.-வில் அதிகாரத்தை கன்பர்ம் செய்யும் ஒரு சடங்கு. அண்ணாவுக்கு கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கருணாநிதிக்கும் எக்ஸ்டென்ட் பண்ணப்பட்டது. அதன்பின் ஸ்டாலினுக்கும் நீடிக்கப்பட்டது. விடுவாரா அஞ்சா நெஞ்சர்? அவரது ஆட்கள் மதுரையை தடல்புடல் படுத்தினார்கள்.
இப்போது கனிமொழி பிறந்த நாளுக்கு, பெரிய அளவில் கொண்டாட்டம் தொடங்கியிருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் சென்னையில் செய்யப்பட்டபோது, கனிமொழிக்கு தகவல் சொல்லப்பட்டது. அவருக்கு அதில் லேசான தயக்கம் இருந்தது. ஆனால், ராசாத்தி அம்மாளுக்கு ஆட்சேபணை ஏதும் இருக்கவில்லை. அதன்பின் கனிமொழியும் சம்மதிக்கவே ஏற்பாடுகள முழு வேகத்தில் நடந்தன. ராசாத்தி அம்மாள் நேரில் கலந்துகொண்டு மைக் பிடித்து பேசுவது என்ற யோசனை வந்தபோது, அதற்கு கனிமொழியின் கிரீன் சிக்னல் கிடைத்தது!
கோபாலபுரத்தில் இதையெல்லாம் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தடுக்க முடியாதபடி அவர்களது விஷயம் ஒன்று, வசமாக இவர்களிடம் மாட்டிக் கொண்டிருந்தது! அதைத்தான் ராசாத்தி அம்மாள் பிறந்தநாள் விழாவில் தனது பேச்சில் குறிப்பிட்டார். (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
இப்போது, இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியில் கனிமொழியின் முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு கோபாலபுரத்துக்கு 'நல்லபடியாக' முடியும்வரை ராசாத்தி அம்மாள்-கனிமொழி செய்யும் எந்தக் காரியத்தையும் அவர்கள் தடுக்கப் போவதில்லை என்பது இவர்களுக்கு நன்றாகவே புரிந்து விட்டது.
அதையடுத்து தற்போது சி.ஐ.டி. காலனியில் இருந்து அழுத்தம்மேல் அழுத்தமாக வரத் தொடங்கி விட்டது என்கிறார்கள் உள்வீட்டு விஷயம் அறிந்தவர்கள்.
ஸ்டாலினுக்கு கட்சியின் நெம்பர்-2 இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அழகிரி கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ளார். குறைந்தபட்சம் அழகிரியின் அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்கிறது சி.ஐ.டி. காலனி பிரஷர்.
ஏற்கனவே எம்.பி.-யாக உள்ள கனிமொழிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுங்கள். கட்சி மட்டத்தில் ஓய்வெடுக்கும் வயதில் உள்ள யாராவது ஒரு தலையை அகற்றிவிட்டு, அந்தப் பதவியை கனிமொழிக்கு கொடுங்கள் என்ற தடாலடி கோரிக்கை வந்து விழுந்திருக்கிறது என்கிறார் கட்சியின் சீனியர் எம்.பி. ஒருவர். இந்த விவகாரத்தில், ஸ்டாலினை விட, அழகிரிதான் அதிகம் அதிர்ந்து போயிருக்கிறார் என்றும் கூறுகிறார் அவர்.
சமீபத்தின் தம்மை போனில் தொடர்புகொண்ட தி.மு.க. எம்.பி. ஒருவரிடம் "ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, ஜாமீனில் வெளியே வந்துள்ள கனிமொழிக்கு அமைச்சரவையில் இடம் கேட்பது எமக்கே அவமானமான விஷயமல்லவா? கேட்டாலும் அவர்கள் (காங்கிரஸ் மேலிடம்) கொடுக்கப் போவதில்லை. அதன்பின் நாம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு டில்லியில் அரசியல் செய்வது? சென்னையில் இருப்பவர்கள் சென்னையிலேயே இருந்து விடுவார்கள். டில்லியில் இருக்க வேண்டியவர்கள் நாமல்லவா?" என்று ஆவேசப் பட்டிருக்கிறார்.
"சரி. அமைச்சர் பதவி கேட்கிறோம். அவர்கள் தரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்து என்ன? மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் வாங்குங்கள் என்று அவர்கள் (கனிமொழி-ராசாத்தி அம்மாள்) பிரஷர் கொடுப்பார்கள். ஆதரவை வாபஸ் வாங்கினால், அமைச்சரவையில் நாங்கள் இல்லை. ஒருவேளை ஆட்சியே கவிழ்ந்தால், மீண்டும் எம்.பி.யாக நீங்களும் வரமுடியாது, நானும் வரமுடியாது. ஊரில் இருந்து விவசாயம் செய்ய வேண்டியதுதான்" என்றும் பொரிந்தாராம் அவர்.
போனில் தொடர்பு கொண்ட எம்.பி. "ஆமால்ல.. நீங்க சொல்றது சரிதான்" என்று கம்மென்று போனை வைத்துவிட்டார்.
இதை எமக்கு கூறிய தி.மு.க. எம்.பி., "இந்த உரையாடலில் அழகிரிக்கு தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது தெரியுமா?" என்று கேட்டு கண்ணடித்தார்!
"என்னங்க அது?"
"அழகிரியை தொடர்பு கொண்ட எம்.பி.யே கனிமொழி தரப்பின் தூதுவராக அழகிரியுடன் பேச உத்தரவிடப்பட்ட ஆள்தான் என்பது அழகிரிக்கு தெரியாது. கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று அழகிரியை கன்வின்ஸ் பண்ணி, அவரது ஆதரவை பெறுவதற்காக இந்த எம்.பி.யை அழகிரியுடன் பேசுமாறு சொல்லி போன் பண்ண வைத்திருந்தார்கள். பாவம் அந்தாளு.. போனை எடுத்ததுமே அழகிரி பொரிந்து தள்ளிவிட்டார். இவர் "ஆமாங்க.. ரொம்ப சரிங்க.." என்பதற்குமேல் எதுவும் பேச முடியாமல் போனை வைத்துவிட்டார்"
"அப்படியானால் இந்த எம்.பி.க்கு சி.ஐ.டி. காலனியில் செம டோஸ் விழுந்திருக்க வேண்டுமே" என்று நாம் கேட்டதற்கு, எம்முடன் பேசிய தி.மு.க. எம்.பி. பதில் சொல்லவில்லை.
அட, இதுதாங்க கட்சிக் கட்டுப்பாடு!
Post a Comment