News Update :
Home » » விழுப்புரத்தில் பயணிகள் ரயில் மீது இன்ஜின்கள் மோதல்

விழுப்புரத்தில் பயணிகள் ரயில் மீது இன்ஜின்கள் மோதல்

Penulis : karthik on Monday, 9 January 2012 | 05:32

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மயிலாடுதுறை -
விழுப்புரம் பயணிகள் ரயில் மீது இன்று அதிகாலை டீசல் இன்ஜின்கள்
பயங்கரமாக மோதின. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம்
ஏற்படவில்லை.
மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு பயணிகள் ரயில்
இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்றிரவு 9.15 மணிக்கு விழுப்புரம் ரயில்
நிலைய 6-வது பிளாட்பாரத்தில் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி
சென்ற பிறகு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அதே இடத்துக்கு
கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை மீண்டும் மயிலாடுதுறைக்கு
செல்ல இருந்தது.
நள்ளிரவு 1.10 மணியளவில் ஒன்றாக இணைக்கப்பட்ட 2 ரயில் இன்ஜின்கள், டீசல்
நிரப்பிக்கொண்டு அதே பிளாட்பாரத்தில் வந்துள்ளது. இன்ஜினை டிரைவர்
எத்திராஜ் ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக மயிலாடுதுறை -விழுப்புரம்
பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி மீது இன்ஜின் பயங்கரமாக மோதியது. அப்போது
குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டதால் ரயில் நிலையத்தில் இருந்தவர்கள்
அதிர்ச்சி அடைந்தனர்.
இன்ஜின் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி உடைந்து உருக்குலைந்தது.
இன்ஜின் முகப்பு பகுதியும் சேதமடைந்தது.தடம் புரண்ட பெட்டி,
பிளாட்பாரத்தின் மீது ஏறி நின்றது. ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர்
பிடிக்கும் குழாய்கள் உடைந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. பயணிகள் ரயில்
அதிகாலை 5.40 மணிக்குதான் மயிலாடுதுறைக்கு புறப்படும் என்பதால் பயணிகள்
யாரும் அதில் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் விழுப்புரம் ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப பிரிவு
அதிகாரிகள்,ஊழியர்கள், ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர்
விரைந்து வந்தனர். ரயிலில் யாராவது இருக்கிறார்களா என்று சோதனை செய்தனர்.
மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, விடிய விடிய நடந்தது. சேதமடைந்த
பெட்டியை மட்டும் கழற்றிவிட்டு மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில்
அதிகாலை 5.40 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. விபத்து குறித்து
டீசல் இன்ஜின் டிரைவர்எத்திராஜ் உள்ளிட்ட சிலரிடம் உயர் அதிகாரிகள்
விசாரித்து வருகின்றனர்.
விபத்துக்கு யார் காரணம்?
விபத்துக்கு டீசல் இன்ஜின் டிரைவர்தான் காரணம் என்று உயர் அதிகாரிகள்
குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதை கடைநிலை ஊழியர்கள்
மறுக்கின்றனர். அவர்கள் கூறுகையில், 'ரயிலோ, இன்ஜினோ எந்த தண்டவாளத்தில்
செல்ல வேண்டும் என்று பாயின்ட் கொடுத்து அனுமதிப்பது உயர்
அதிகாரிகள்தான். அவர்கள் கொடுக்கும் உத்தரவுப்படிதான் இன்ஜினை டிரைவர்
இயக்க வேண்டும். மயிலாடுதுறை பயணிகள் ரயில் 6-வது பிளாட்பாரத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதே தடத்தில் டீசல் இன்ஜின்களை
இயக்க அனுமதித்தது யார்? டிரைவர் மீது குற்றம்சாட்டிவிட்டு உயர்
அதிகாரிகள் தப்பிக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி
தவறு செய்தவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger