ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது. சிம்பிளா பதிவுத் திருமணம் செய்து கொள்ளவே நான் விரும்புகிறேன் என்று நடிகை டாப்ஸி கூறியிருக்கிறார். ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களில் நடித்த டாப்ஸிக்கு விரைவில் திருமணம் என்றும், மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து டாப்ஸி அளித்துள்ள பேட்டியில், "திருமணம் செய்து கொள்வது அப்படியொன்றும் தவறான விஷயமில்லையே. எல்லோருக்கும் இனிமையான ஒன்று. ஒவ்வொருவரும் தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்ப்பது உண்டு. ஆனால் நான் அப்படி யோசிக்கும் நிலையில் இல்லை. இப்போதைக்கு என் திருமணம் நடக்காது. ஆனால் எனக்கு கணவராக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வைத்துள்ளேன். அவர் என்னை மட்டுமில்லாமல் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் புரிந்து செயல்பட வேண்டும். சினிமாவை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதை எதிர்ப்பவராக இருக்கக் கூடாது. திருமணங்கள் ஆடம்பரமாக நடப்பதும் எனக்குப் பிடிக்காது. மணப்பெண்ணுக்கு உடம்பு நிறைய நகைகள் போட்டு பட்டுச்சேலை உடுத்தி மணமேடையில் பல மணி நேரம் உட்கார வைக்கிறார்கள். திருமண மண்டபங்களில் நிறைய கூட்டத்தை அழைத்து வைத்து முகூர்த்தத்தை நடத்துகின்றனர். மணப்பெண் அவ்வளவு நேரம் எப்படித்தான் பொறுமையாக இருக்கிறாளோ புரியவில்லை. என்னை பொறுத்தவரை சிம்பிளாக பதிவு திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.
Post a Comment