News Update :
Home » » ஹர்பஜன் விரைவில் மீண்டு வருவார் * சேவக் ஆதரவு

ஹர்பஜன் விரைவில் மீண்டு வருவார் * சேவக் ஆதரவு

Penulis : karthik on Friday, 14 October 2011 | 07:26


புதுடில்லி: "இந்திய அணியில் இருந்து நீக்கப்பட் ஹர்பஜன், விரைவில் அணியில் தனது இடத்தை பிடிப்பார். இது அவருக்கு ஒரு விஷயமே அல்ல," என, சேவக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து "பார்ம்' சரியில்லை என்ற காரணத்துக்காக ஹர்பஜன் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து இந்தியாவின் சேவக் கூறியது:
ஹர்பஜன் சிங் ஒரு சாம்பியன் பவுலர். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர் சாம்பியன்ஸ் லீக் தொடருக்குப் பின், சாலஞ்சர் தொடரில் திறமை வெளிப்படுத்தினார். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இப்படித்தான் கடந்த 2007ல் "பார்ம்' சரியில்லை என்று அணியில் இருந்து நான் நீக்கப்பட்டேன்.
பின், உள்ளூர் கிரிக்கெட்டில் மீண்டும் திறமை வெளிப்படுத்தி அணிக்கு திரும்பினேன். இழந்த "பார்மை' திரும்ப பெறுவதற்கு உள்ளூர் போட்டிகள் தான் கைகொடுக்கும். இது தான் அணிக்கு திரும்ப சரியான வழி. ஹர்பஜனை பொறுத்தவரையில் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.
கடின முயற்சி:
எனது தோள்பட்டை, காது கேளாமை சிக்கல்கள் கொஞ்சம், கொஞ்சமாக சரியாகி வருகிறது. இதற்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில், மறு வாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எப்போது குணமடைவேன் என்பதை, சரியாக கூறமுடியாது. இதை நான் விரும்பவும் இல்லை. இருப்பினும், விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக, கடினமாக முயற்சித்து வருகிறேன். எப்படியும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராகிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
நிறைவேறிய கனவு:
தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தில், எனது தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளேன். ஏனெனில் சிறுவர்களுக்காக, அகாடமி துவங்க வேண்டும் என்பது தான் அவரது பெரிய கனவு. இதன் மூலம் சிறுவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். இதை நிறைவேற்றுவது குறித்து தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்சித்து வந்தேன். ஒருவழியாக நிறைவேறியது மகிழ்ச்சி தருகிறது.
முதல்வருக்கு நன்றி:
இந்த அகாடமிக்கு இடம் தந்த, அரியானா முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து இந்த அகாடமியில் தேவையான தரமான வசதிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளேன். பின், டில்லியில் போட்டிகள் நடக்கும் போதெல்லாம், சக இந்திய வீரர்களை இந்த அகாடமிக்கு அழைத்து வந்து, சிறுவர்களிடம் பேச ஏற்பாடு செய்வேன். இது அவர்களுக்கு பெரிய அளவில் தூண்டுகோலாக இருக்கும். தவிர, ஆர்வத்தையும் அதிகரிக்கும்.
வெளிநாட்டு தொடர்:
எதிர்காலத்தில், எனது அகாடமி சார்பில் அணியை தேர்வு செய்து, வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க செய்து, அவர்களது திறமையை வெளிக்கொணர உதவுவேன். அம்பயர் மறுபரிசீலனை முறையை (டி.ஆர்.எஸ்.,) தொடரில், நடைமுறைப் படுத்துவதை அந்தந்த நாடுகளின் விருப்பத்துக்கு விட்டுள்ளது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) முடிவு. இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
இவ்வாறு சேவக் கூறினார்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger