தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் மக்கள் 5 மாதங்களில் வேதனைதான் அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு, தற்போது 5 மணி நேரங்களாகவும், சில கிராமப் புறங்களில் 24 மணி நேரமாகவும் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 1967ம் ஆண்டில் இருந்து திராவிடக் கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி சுரண்டி வருகின்றன.
தமிழக உள்ளாட்சி தேர்தலில், மக்கள் காங்கிரசுக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான ஆதரவை காட்ட உள்ளார்கள். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என்று நூற்றுக்கணக்கில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று பதவியில் அமரப் போகிறார்கள்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் உண்மையான போட்டி, காங்கிரஸூக்கும், அதிமுகவுக்கும் இடையே மட்டுமே உள்ளது. திமுக இந்தத் தேர்தல் போட்டியில் இருப்பதாக எங்கும் தெரியவில்லை.
காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் மக்களிடம் இருந்து நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் கடந்த 40 வருடங்களாக இல்லாத மக்களின் ஆதரவு தற்போது கிடைத்துள்ளது.
காங்கிரஸுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவைக் கண்டு பயந்து தான், தமிழகத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதிகளில், முதல்வர் ஜெயலலிதா 3 நாள்கள் திடீர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பண பலத்தை நம்பி திமுக எப்படி தோல்வி அடைந்ததோ, அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் பணபலத்துடன் களம் இறங்கியுள்ள அதிமுகவும் தோல்வி அடையும்.
இந்த ஆட்சி மாற்றத்தால் தமிழக மக்கள் 5 மாதங்களில் வேதனைதான் அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் 2 மணி நேரங்களாக இருந்த மின்வெட்டு, தற்போது 4 மணி நேரங்களாகவும், சில கிராமப் புறங்களில் ஒரு நாள் முழுவதிலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நிலப்பறிப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 95 சதவீதம் உண்மையானவை. திமுக ஆட்சியாளர்கள் மக்கள் நலனை கவனிக்காமல், சொத்து சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால், தற்போது அதற்கான தண்டனையை அனுபவிக்கின்றனர். ஜெயிலில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் தேசவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் என்றார்.
முன்னதாக நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கின்றனர் என நல்லகண்ணு கூறுகிறார். அவர் ஒரு பக்கத்தை மட்டும் தான் கூறுகிறார். மறு பக்கத்தில் திமுகவினர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக உள்ளது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை.
அதிமுக அரசின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. போகபோக பழைய நிலை உருவாகிறதோ என அச்சம் ஏற்படுகிறது. மக்கள் பிரச்சனையில் முன்னேற்றம் இல்லை. கல்வியை முடக்கிவிட்டார்கள்.
முதல்வர் ஜெயலலிதா தீவிரவாதத்திற்குத் துணை போகிறார். ராஜிவ்காந்தி கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தவறு. தீவிரவாதிகளின் பட்டியலில் அவரும் இருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது. அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அதனை மறந்து விட்டு யாரோ புகழ் பாடுகின்றனர் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்தது தவறானது.
அத்வானி ரதயாத்திரையை பல தடவை தொடங்கியுள்ளார். நடக்க முடியாத காரணத்தால் ரத யாத்திரை நடத்துகிறார் என்றார் இளங்கோவன்.
Post a Comment