ஐதராபாத்:"சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) புதிய விதிமுறைகள் தந்திரமானவை. இரண்டு புதிய பந்துகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இனி "ரிவர்ஸ் சுவிங்' செய்வது சிக்கலாகி விடும்," என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில், ஐ.சி.சி., சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:
ஐ.சி.சி., சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகள் தந்திரமானவை. இந்த முறைப்படி இதுவரை விளையாடியது இல்லை. இதன் படி 16, 40 வது ஓவரில் இரண்டாவது, மூன்றாவது (பவுலிங், பேட்டிங்) "பவர்பிளேயை' எடுக்க வேண்டும் என்பதால், இனி வித்தியாசமான முறையில் திட்டமிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வித்தியாசமான முடிவு:
இதற்கு முன், இலக்கை துரத்தும் அணிகள், கடைசி ஐந்து ஓவர்களில் பேட்டிங் "பவர்பிளேயை' பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தன. இப்போது புதிய விதிகள் காரணமாக, வேறுசில தந்திரங்களை பயன்படுத்த வேண்டியதுள்ளது. இதனால் போட்டியில் வித்தியாசமான முடிவுகள் ஏற்படலாம்.
"சுவிங்' சிக்கல்:
பழைய பந்துகளை பயன்படுத்தும் போது, 35 ஓவர்களுக்குப் பின் "ரிவர்ஸ் சுவிங்' செய்ய ஏதுவாக இருக்கும். தற்போது, இரண்டு புதிய பந்துகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இதற்கும் வழியில்லாமல் போயுள்ளது. வேறுவழியின்றி, மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப, பந்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்படுவதைப் பொறுத்து இனி "ரிவர்ஸ் சுவிங்கை' எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காம்பிர் சிறந்த துவக்க வீரராக இருந்துள்ளார். இவர் மூன்றாவதாக களமிறங்குவது என்பது, சச்சின், சேவக் அணிக்கு துவக்கம் தந்தால் மட்டுமே. அதேநேரம், இங்கிலாந்தில் பார்த்திவ் படேல், ரகானே சிறப்பாக செயல்பட்டதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதுள்ளது. எனவே சூழ்நிலைக்கு தகுந்து முடிவெடுப்போம்.
அணியில் புதியதாக இடம் பெற்றுள்ள ஸ்ரீநாத் அரவிந்த், சாம்பியன்ஸ் லீக் தொடரில் மோசமாக செயல்பட்டார் என்பதற்காக, அவரை ஒதுக்க முடியாது. ஒருசில தொடர்களை வைத்து, வீரரின் திறமை குறித்து முடிவுக்கு வந்துவிடக் கூடாது.
வெற்றி வாய்ப்பு:
தற்போதுள்ள இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இருந்தாலும், இங்குள்ள ஆடுகளங்கள் முற்றிலும் வித்தியாசமானவை. மொத்தத்தில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் எப்படி செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்து தான் அணியின் வெற்றி அமைந்துள்ளது.
இவ்வாறு தோனி கூறினார்.
மழை வருமா
இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடக்கும் ஐதராபாத்தில், வெப்பநிலை அதிகபட்சம் 31, குறைந்த பட்சம் 21 டிகிரி செல்சியசாக இருக்கும். இரவில் வானம் மேகமூட்டமாக காணப்படும். இடியுடன் கூடிய மழை வருவதற்கு 20 சதவீத வாய்ப்புள்ளது.
ஆடுகளம் எப்படி
இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐதராபாத், ராஜிவ் மைதானத்தில் விளையாடுவது இது தான் முதன் முறை. இதற்கு முன் இந்திய அணி இங்கு விளையாடிய மூன்று போட்டிகளிலும் (தென் ஆப்ரிக்காவுடன் 1, ஆஸ்திரேலியாவுடன் 2) தோல்வியடைந்துள்ளது.
ஆடுகளம் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக 350/4 ரன்கள் (2009) குவித்துள்ளது. இதை விரட்டிய இந்திய அணி 347 (அதிகபட்சம்) ரன்கள் எடுத்தது.
Post a Comment