சென்னை: தாய்லாந்தில் நடைபெறவுள்ள திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் (International Queen Competition) சென்னையைச் சேர்ந்த மலாய்க்கா பங்கேற்கிறார்.
கம்பீரமான அழகுடன் காணப்படும் மலாய்க்கா, நிச்சயம் உலக அழகி ஆவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதுகுறித்து மலாய்க்கா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
எனது பெயர் மலாய்க்கா. நான் சென்னைதான். கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ளேன். என்னை எனது வீட்டில் ஒதுக்கி வைக்காமல் ஆதரித்து படிக்க வைத்து ஆளாக்கினர். எனது குடும்பத்தினருடன்தான் நான் தங்கியுள்ளேன். இது எனக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
நான் கடந்த 2007ல் நடந்த மிஸ் சகோதரன் அழகிப் போட்டியில் முதலிடம் பிடித்தேன். பிறகு மாடலிங்கில் நுழைந்தேன். ஆனால் சரியான வாய்ப்புகள் வரவில்லை. நான் தினசரி உடற்பயிற்சி செய்து எனது உடல் வனப்பையும், அழகையும் பராமரித்து வருகிறேன். டயட்டில் இருக்கிறேன். இதனால்தான் நான் அழகாக இருக்கிறேன்.
தாய்லாந்துக்குப் போகும் வாய்ப்பு எனக்கு வந்தபோது, அங்கு நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில் பங்கேற்குமாறு என்னிடம் பலரும் கூறினர். இதையடுத்தே நான் அதில் பங்கேற்க தனிப் பயிற்சி எடுத்தேன். தற்போது நவம்பர் 4ம் தேதி நடைபெறும் இப்போட்டியில் நான் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறேன்.
இந்தியா சார்பி்ல பங்கேற்க என்னைத் தேர்வு செய்துள்ள செய்தியைக் கேட்டதும் அப்படியே பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து எழுந்ததைப் போல உணர்ந்தேன். எனது ஒட்டுமொத்த சமுதாயத்தின் சார்பில் நான் பங்கேற்கப் போவதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடம். எனது திறமைக்கும் மதிப்பு கிடைத்துள்ளதை நான் உணர்கிறேன். இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார் அவர்.
Post a Comment