அமைச்சர் கருப்பசாமி தமது வெள்ளந்தியான பேச்சினால் முதல்வர் ஜெயலலிதாவின் மனதில் இடம்பிடித்தவர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமைச்சர் கருப்பசாமி.
அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மைக் கிடைத்துவிட்டால் "எம்.ஜி.ஆர்.,சினிமாக்களில் இருந்து ஏதாவது பாடலை பாடாமல் விடமாட்டார்". கச்சேரிகளில் இசையமைப்பாளர்களின் தாளத்திற்கு ஏற்ப பாடுவதில் வல்லவர். சில நேரங்களில் இரண்டு, மூன்று பாடல்கள் கூட தொடரும்.
சென்னையில் அமைச்சராக பொறுப்பேற்றபோது உறுதிமொழி வாசகங்களை கவர்னர் வாசிப்பதற்கு முன்பாகவே விறுவிறுவென வாசித்து மேடையில் இருந்த முதல்வர் ஜெ., தோழி சசிகலா, பத்திரிகையாளர் சோ என அனைவரது மத்தியிலும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியவர்.
மதுரையில் கடந்த ஆட்சியின் போது பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் முதல்வர் ஜெ.,தலைமையில் நடந்தது. அதில் பங்கேற்ற கருப்பசாமி, மத்திய அமைச்சர் அழகிரிக்கு எதிராக சவால் விட்டு பேசிய பேச்சு, முதல்வர் <உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்தது. நெல்லையிலும் முதல்வர் ஜெ.,பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருப்பசாமி, மத்திய அமைச்சர் அழகிரியை குறிப்பிட்டு பேசுகையில், "நீ பெரிய மந்திரியாக இருக்கலாம்... ஆனால், என்னோட ஓட்டப்போட்டியில் பங்கேற்க முடியுமா..' என வடிவேலு பாணியில் நகைச்சுவையாக விட்ட சவால், முதல்வர் உள்ளிட்ட அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சிகளில் அலங்கார சொற்கள் இன்றி, திருநெல்வேலி நடையில் வெள்ளந்தியாக பேசும் அவரது பேச்சு, மக்களையும் கவரும்.
*கருப்பசாமிக்கு முத்துமாரி என்ற மனைவியும் மகள் முத்துலட்சுமி,29, மகன் மாரிச்சாமி, 26, ஆகியோர் உள்ளனர். முத்துலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது. மகன் மாரிச்சாமி, ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.
*தென்மாவட்டங்களில் அமைச்சர் அந்தஸ்தில் இருந்தாலும், மிக குறைவான சொத்துப்பட்டியலை காண்பித்தவர் அமைச்சர் கருப்பசாமி தான்.
Post a Comment