News Update :
Home » » பெங்களூர் கோர்ட்டுக்கு தண்ணி காட்டிய ஜெயலலிதா

பெங்களூர் கோர்ட்டுக்கு தண்ணி காட்டிய ஜெயலலிதா

Penulis : karthik on Monday, 24 October 2011 | 01:59

 
 
 
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், சென்னையில் வேறு சில முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளன என்று பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதியிடம் கூறிய முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்க வைத்து விட்டார். ஆனால் சொன்னபடி அவர் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்துக்கு போகாமல் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் அனுப்பி வைத்து விட்டு டபாய்த்து விட்டார்.
 
கடந்த 14 வருடங்களாக பெங்களூர் தனி கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு முறை கூட ஆஜராகமல் இருந்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த கண்டிப்பான உத்தரவுக்குப் பின்னர்தான் அவர் அக்டோபர் 20ம் தேதி முதல் முறையாக ஆஜரானார். அவரிடம் 2 நாள் விசாரணை நடத்தியது பெங்களூர் கோர்ட். பின்னர் நவம்பர் 8ம் தேதிக்கு வழக்கை நீதிபதி மல்லிகார்ஜூனய்யா ஒத்திவைத்தார்.
 
முன்னதாக அக்டோபர் 22ம் தேதி ஜெயலலிதாவை ஆஜராகுமாறு உத்தரவிட்டார் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா. அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, அன்று தேசிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடப்பதாகவும், தான் அன்று அங்கு போயாக வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதையடுத்து நவம்பர் 4ம் தேதியன்று ஆஜராகுமாறு நீதிபதி கூறவே அன்று சென்னையில் சில முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்தார் ஜெயலலிதா. இதையடுத்து வேறு வழியில்லாமல் நவம்பர் 8ம் தேதியன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி.
 
ஆனால் நீதிமன்றத்தில் கூறியபடி அவர் தேசிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் போகவில்லை. தனக்குப் பதிலாக ஓ.பன்னீர் செல்வத்தை அனுப்பி வைத்தார். அவரும் போய் ஜெயலலிதாவின் உரையை படித்து விட்டு வந்தார்.
 
அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்கள் நடந்த விசாரணையின்போது ஜெயலலிதாவிடம் 567 கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்குப் பதிலளித்தார் ஜெயலலிதா. மொத்தம் உள்ள 1339 கேள்விகளில், இந்தக் கேள்விகள் போக மிச்சக் கேள்விகளுக்கு அவர் நவம்பர் 8ம் தேதி பதிலளிக்கவுள்ளார்.
 
முதல் முறையாக பெங்களூர் கோர்ட்டுக்கு வந்த ஜெயலலிதா படு அமர்க்களமாக தனது பெங்களூர் விஜயத்தை மேற்கொண்டார். தனி விமானத்தை வாடகைக்கு அமர்த்தி அவர் இரு நாட்களும் பெங்களூர் வந்து சென்றார். அவருக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசும், காவல்துறையும் மேற்கொண்டிருந்தன. சாதாரண வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா படு ஆடம்பரமாக வந்து போனதை பெங்களூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
ஜெயலலிதா கோர்ட்டுக்கு வந்ததை நாட்டில் உள்ள அத்தனை முன்னணி சானல்களும், இணையதளங்களும் ஒவ்வொரு நிமிட நடவடிக்கையையும் ஒளிபரப்பு செய்து அசத்தினர். ஜெயலலிதாவின் இந்த 2 நாள் கோர்ட் வருகைக்காக 2000 போலீஸார் பாதுகாப்பு கொடுத்தனர்.
 
இதற்கிடையே டெல்லி தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோர்ட்டில் தெரிவித்த ஜெயலலிதா, ஏன் சொன்னபடி டெல்லிக்குப் போகவில்லை என்பது மர்மமாக உள்ளது. கோர்ட்டுக்கு வருவதைத் தவிர்க்க இவ்வாறு அவர் சொன்னாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
ஒருவேளை அன்றைய தினம் திமுக தலைவர் கருணாநிதி டெல்லியில் இருந்ததால் தனது டெல்லி பயணத்தை ஜெயலலிதா தவிர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
இதற்கிடையே நவம்பர் 8ம் தேதியும் ஜெயலலிதா கோர்ட்டுக்கு வருவது சந்தேகம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அவரது வக்கீல் பி.குமார் பேச்சிலிருந்து இது புரிகிறது. இதுகுறித்து பி.குமார் கூறுகையில், 2 நாள் விசாரணை நடத்தி ஜெயலலிதாவிடம் வாக்குமூலம் வாங்குமாறு உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி ஜெயலலிதாவும் 2 நாட்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து விட்டார். மறுபடியும் ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்தப்பட மாட்டாது. அவரை மீண்டும் பெங்களூர் கோர்ட் விசாரிக்க முடியாது. மேல் உத்தரவுக்காக நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றார்.
 
இதன் மூலம் பெங்களூர் கோர்ட்டுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையிலான இழுபறி மீண்டும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger