பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன் சிங். மற்றபடி முடிவெடுப்பது உள்ளிட்ட அனைத்தையும் சோனியா காந்திதான் செய்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
38 நாள் யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி, ஒரிசா மாநிலம் பர்கார் என்ற இடத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், டாக்டர் மன்மோகன் சிங்தான் நான் கண்ட பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவர். பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன் சிங். மற்றபடி அனைத்து முடிவுகளையும் சோனியா காந்திதான் எடுக்கிறார்.
மன்மோகன் சிங் அரசைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால் மன்மோகன் சிங்கின் 'செயல்திறன்'தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அதிகாரப்பூர்வமாக அவர் பிரதமராக இருந்தாலும், அவர் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றே நான் கருதுகிறேன். அனைத்து முடிவுகளையும் காங்கிரஸ் தலைவர்தான் எடுக்கிறார் என்றார் அத்வானி.
கடந்த வாரம்தான் நாட்டிலேயே மிகவும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் என்று கடுமையாக சாடியிருந்தார் அத்வானி. இதற்குப் பதிலளித்த பிரதமர், அத்வானி தனது பேச்சின்போது கடுமையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன், முடிவுகளை சோனியாதான் எடுக்கிறார் என்று அத்வானி சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment