News Update :
Home » » இந்திய அரசின் தலையீட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – கலாநிதி குணதாச அமரசேகர.

இந்திய அரசின் தலையீட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – கலாநிதி குணதாச அமரசேகர.

Penulis : karthik on Saturday 8 October 2011 | 02:36

இந்தியா தனது நாட்டுப் பிரச்சினைகளையே தீர்த்துக்கொள்ள இயலாமல் சிக்கித் தவிக்கும் நிலையில் இலங்கை உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்க முயற்சிக்கின்றது. இந்திய அரசின் தலையீட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு தெரிவிக்கின்றார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இன்று இலங்கை வருகிறார். அவரது இலங்கைப் பயணத்தில் ஜனாதிபதி உட்பட அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்பொருட்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகளில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஆராய்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பினரிடமும் இந்த விடயங்கள் தொடர்பாக அவர் கேட்டறிவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரியவருவதாவது:

இந்திய அரசு மட்டுமல்ல, மேற்கத்தேய நாடுகளும் இலங்கை உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க முயற்சிக்கின்றன. இந்திய அரசின் அழுத்தங்களே நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளன. சர்வதேச சமூகத்தின் தலையீட்டை நாம் அனுமதிக்கமாட்டோம். இந்திய நாட்டில் தீர்க்கமுடியாத எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு முதலில் வழிதேடுங்கள். பின்னர் மற்றைய விடயங்களைப் பார்க்கலாம் என இந்திய அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காகவே தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றனர். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுள் சிலர் புலிகளுடன் கூடி கும்மாளம் அடித்தவர்கள்தான் என்பதை எவராலும் மறந்துவிடமுடியாது. இவ்வாறானவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இந்திய மத்திய அரசு இலங்கையின் விவகாரங்களில் தலையிட முனையக்கூடாது. அவ்வாறு செயற்பட நினைத்தாலும் அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

ஆயுதப் போராட்டம் மூலம் பெறமுடியாததை சிலர் இராஜதந்திர ரீதியில் நகர்வுகளை முன்னெடுத்துப் பெற முனைகின்றனர். இதற்கு இந்தியா உட்பட மேற்கத்தேய நாடுகள் துணை நிற்கின்றன. அந்நாடுகளின் அண்மைக்கால செயற்பாடுகள் அதனையே நிரூபிக்கின்றன என்றார்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger