தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. அரசு பதவிக்கு வந்த 6 மாதங்களுக்குள் ஒரே ஆண்டில் நான்காயிரம் கோடி ரூபாய் வரி கூடுதலாக வசூலிக்க திட்டமிட்டிருப்பது பற்றி?
பதில்:- பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு சில நாட்களிலேயே ஒருசில பொருள்களுக்கு 4 சதவிகிதம் என்று ஏற்கனவே இருந்த வரியை 5 சதவிகிதமாகவும், ஏற்கனவே 12 சதவிகிதமாக இருந்த பொருள்களின் மீதான வரியை 14 சதவிகிதமாகவும், 20 சதவிகிதமாகவும் உயர்த்தினார்கள்.
ஆட்சிக்கு வந்த 3 மாத காலத்திற்குள்ளாகவே, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே சுமார் ரூ.4,000 கோடி அளவிற்கு வரிகளை சுமத்தியிருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் டி.டி.எச். சேவைக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கும் வரி கிடையாது.
ஆனால் இப்போது டி.டி.எச். சேவைக்கு 30 சதவிகிதமும், ஐ.பி.எல்.க்கு 25 சதவிகிதமும் வரியினை விதித்தார்கள். இதன் மூலம் ரூ.120 கோடி வருவாய் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக 6 மாத கால ஆட்சியில் நான்காயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. அரசு செய்துள்ளது. .
கேள்வி:- ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக திருவள்ளூரில் தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்களே?
பதில்:- தி.மு.க.வினர் மீது இதே குற்றச்சாற்றினை கூறியபோது தே.மு.தி.க. தலைவர் அதையெல்லாம் வரவேற்று பாராட்டினார். தற்போது உள்ளாட்சி தேர்தல்களில் அவர் உடன்பாடு கொள்ளவில்லை என்றதும், அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் பொய் வழக்குகள் போடும் செயல் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, அவர்களோடு ஒத்துப்போனால் உறவு; எதிர்த்தால் பொய் வழக்கு.
கேள்வி:- தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தல் குறைந்துவிட்டதாக அ.தி.மு.க.வின் உணவமைச்சர் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அந்த அமைச்சரே, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் அரிசி கடத்தல் தொடர்பாக சுமார் 4,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த புள்ளிவிவரங்கள் ரேஷன் அரிசி கடத்தல் குறைந்து விட்டதாக காட்டவில்லையே?
கேள்வி:- மின் பற்றாக்குறை, கையாலாகாத அரசு என்றெல்லாம் அன்றாடம் அறிக்கை விட்ட ஜெயலலிதாவின் ஆட்சியின் நிலை என்ன?
பதில்:- மின் கருவி ஏற்றி வந்த லாரி விபத்துக்கு உள்ளாகி விட்டது என்றும்; இதனால் சென்னைக்கு தொழில்நுட்ப கருவிகளை கொண்டுவர மேலும் ஆறு மாதங்கள் தாமதமாகும் என்றும், தமிழக மின்துறை திட்டமிட்டதைவிட, கூடுதலாக ஆறு மாதங்கள், மின் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும், 10 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு இருக்கிறது என்றும்; போதிய அளவு நிலக்கரி இல்லாததால் மின் நிலையங்களின் அனைத்து யூனிட்டுகளையும் இயக்க முடியவில்லை என்றும் அன்றாடம் அடுத்தடுத்து இந்த ஆட்சியில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே தவிர, மின்சார வெட்டு நீண்டு கொண்டே தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post a Comment