அன்புள்ள மினி முனிக்கு வணக்கம்,
கடந்த சில மாதங்களாக இட்லிவடைக்கு விநோத வியாதி பிடித்திருக்கிறது, அதனால் அடிக்கடி அப்டேட் செய்ய முடிவதில்லை. அதனால் முனியை சுறுக்கி மினி முனி...எனக்கு பிடித்திருக்கும் வியாதி போல இப்ப காங்கிரஸாரை கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஒரு வியாதி தாக்கியுள்ளது. அதென்னவென்றால், தற்செயலாக ஏதேனும் கேமராவையோ, அல்லது மைக்கையோ கண்டால் தாமாகவே, எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, இல்லை என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். தூக்கத்திலும் இதையே ஜெபித்தபடிதான் உள்ளனர். பிரதமர் முதல் காங்கிரஸின் கடைநிலை தொண்டர் வரை இந்நோய் பீடித்துள்ளது. காரணம், சிதம்பர ரகசியம் வெளிப்பட்டதுதான்.
மத்திய உள்துறை அமைச்சகம் பொழுது போகாமல், பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதாவது, அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நடவடிக்கை எடுத்திருந்தால், 2G ஊழல் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என்பதே அக்கடிதத்தின் சாராம்சம். இக்கடிதத்தை உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவர் எழுதியிருந்தாலும், அது அப்போதைய உள்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜியின் பார்வை/அனுமதிக்குப் பிறகே அனுப்பபட்டுள்ளது. இதில் இன்னொரு விஷயம், ஒரு அமைச்சகத்தின் அதிகாரியொருவர், அத்துறை அமைச்சரின் ஆட்சேபணையையும் மீறி, பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்ப முடியாது என்பது நடைமுறை விஷயம். இது சாதாரண பாமரனுக்குக் கூட எளிதில் விளங்கும். ஆனால் இந்த முழு பூசணிக்காயைத்தான் சோற்றில் மறைக்க காங்கிரஸ், சிபிஐ துணையுடன் படாத பாடு பட்டு வருகிறது. சல்மான் குர்ஷித் என்ற மகான் சட்ட அமைச்சராக இருக்கிறாராம். அவர் "அமைச்சர் பார்த்தார்" என்றால் அதனை அனுமதித்தார் என்று சொல்ல முடியாது என்கிறார். சரியான "காமெடி பீஸ்"
இஞ்சி சாப்பிட்ட .... போல இருந்த ப்ரணாப் முன்பு இது தொடர்பாக பேசவே மறுத்தவர் இப்போது தினம் ஒன்றாகக் கூறி வருகிறார். லேட்டஸ்டாக, ஒரு வல்லுனரின் கருத்தை அறிந்த பிறகே, இக்கடிதம் தொடர்பாக பேச முடியும் என்றிருக்கிறார். சொன்னதோடு நில்லாமல், அன்றிரவே சோனியாவைச் சந்தித்துப் பேசியும் இருக்கிறார். சோனியாதான் அவர் கூறிய வல்லுனர் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு விஷயத்தைச் செய்யுமுன்பு, அது சரியா தவறா என வல்லுனர் அபிப்ராயத்தை அறிவது முறையா, அல்லது செய்த பிறகு அத்தவறை எப்படி சரி செய்வது என்று வல்லுனர் கருத்தை அறிவது முறையா?
ப்ரணாப் தவிர, தற்போதைய உள்துறையமைச்சர் சிதம்பரமும் சோனியாவை தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். வேடிக்கை என்னவெனில், இருவரும் ஒருவர் பின் ஒருவராகப் போய் சோனியாவிடம் பேசியுள்ளனர். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை என்று கூறும் காங்கிரஸாரிடம், ஏன் இவ்விருவரும் ஒன்றாக சோனியாவைப் பார்க்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலில்லை. வெளியே வந்த ப்ரணாப் யாரும் கேட்காமல் "சிதம்பரம் நல்லவர், வல்லவர் அவர் பெரிய தூண், நல்லவர்" என்று பிதற்றுகிறார். இப்பொழுது கடைசியாக பிரதமர்தான் முடிவெடுக்க வேண்டும், அதுவரை இதில் எதுவும் சொல்வதற்கில்லை என்று ப்ரணாப் சொல்லி விட்டார், என்னவோ அமைச்சரவை முடிவுகளை பிரதமரே எடுப்பது போல.
இக்கடித விவகாரத்தை மையமாகக் கொண்டு, சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமென சுப்ரமணிய சாமி கோர்ட்டில் வாதாடி வருகிறார். ஆனால் வேடிக்கையாக சிபிஐ, சிதம்பரத்தை விசாரிக்கவே முடியாது; எங்களுக்கு யாரை விசாரிக்க வேண்டுமென யாரும் உத்தரவிட முடியாது; சிபிஐ ஒரு தன்னிச்சையான அமைப்பு என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி வருகிறது. அதாவது சிதம்பரத்தை விசாரிப்பது இவ்வழக்கை தாமதப் படுத்துமாம்! முன்பு போஃபர்ஸ் விவகாரத்தில், க்வாட்ரோக்கியை இந்தியா கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, அவ்வழக்கிற்கு சிபிஐ சமாதி கட்டியது. இப்போது சிதம்பரத்தை விசாரிப்பதால் ஏற்படப்போகும் தாமதத்தை கணக்கில் கொண்டு, இவ்விவகாரத்திற்கு சமாதி கட்ட சிபிஐ எத்தனிக்கிறது. சுப்ரீம் கோர்ட் இவ்விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறதென்பது இன்று தெரியும்.
இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய பிரதமர், சிதம்பரத்தின் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் (இவர் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்று யாராவது சொன்னால் நல்லது) இதனைக் கேட்டு சிதம்பரம் கலக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஏனெனில், பிரதமரிடமிருந்து ஏற்கனவே இவ்வாறு சான்றிதழ் பெற்ற ராசா இன்று என்ன கதியிலிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
நேற்றைய முன்தினம் கூகிளுக்குப் பிறந்த தினமாம். அதில் தேடிக் கண்டுபிடிக்க இயலாத விஷயம் ஒன்று உண்டு என ட்விட்டரில் பேசிக் கொள்கிறார்கள். அது மன்மோகன் சிங்கின் முதுகெலும்பாம்.
முதுகு பற்றி பேசிய பிறகு ... அதை பற்றி பேசவில்லை என்றால் சிலர் கோபித்துக்கொள்ளுவார்கள். நல்லி குப்பு சாமிக்கும் இலக்கிய மேடைக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவர் இலக்கியவதிகளுக்கு பின்னாடி பிடிக்காத மதிரி அதாவது அவர்கள் போட்டுக்கொள்ளுவதற்கு ஏற்றவாறு ஜூன்ஸ் தயாரித்துள்ளார். முதல் கஸ்டமர் பா.ரா தான்!. தற்போது Flying Machine கம்பெனி கொடுத்த விளம்பரத்தால் சோனாவிற்கு ஆதரவு தெரிவித்த மகளீர் அமைப்புக்கள் இந்த விளம்பரத்துக்கு எதிரிப்பு தெரிவித்து போராட போகிறார்களாம். FM ஜூன்ஸ் கம்பெனி பா.ராவை அனுக போவதாக பேசிக்கொள்கிறார்கள்.
சோனியா காந்தியை டி.ஆர்.பாலு ஏன் சந்தித்தார் என்று கலைஞர் விளக்கம் அளித்துள்ளார் "சோனியா காந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தோழமைக் கட்சி என்ற முறையில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி தந்தி கொடுத்தேன். பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோதும் வாழ்த்து தெரிவித்தேன். இப்போது நலம்பெற்று திரும்பியிருக்கிறார்.
எனவே, தமிழன் என்ற முறையில் அந்தப் பண்பாட்டோடு அவர் உடல் நலம் பற்றி விசாரிக்க டி.ஆர்.பாலுவை அனுப்பியிருந்தேன்"
என்ன தான் பெரிய ஆளாக இருந்தாலும், கபடி விளையாட போனால் யார் காலையாவது பிடிக்க வேண்டும். அது தான் வீரம் !
இப்படிக்கு,
மினி இட்லி
Post a Comment