திருச்சியில் கைதான பாக். உளவாளி அன்சாரியின் சதி திட்டம் அம்பலம்: தீவிரவாதிகள் ஊடுருவ கடலோர பகுதிகளை படம் பிடித்தான் திருச்சியில் கைதான பாக். உளவாளி அன்சாரியின் சதி திட்டம் அம்பலம்: தீவிரவாதிகள் ஊடுருவ கடலோர பகுதிகளை படம் பிடித்தான்
சென்னை, செப். 18-
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் என்பவரின் மகன் தமீம் அன்சாரி (வயது35). தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அழகம்மாள் நகர், தாஜ் ரெசிடென்சி என்ற முகவரியில் வசித்து வந்த தமீம் அன்சாரி வெங்காய வியாபாரி என்ற போர்வையில் பாகிஸ்தான் உளவாளியாக செயல்படுவதை உளவுத்துறை கண்டுபிடித்து எச்சரித்தது.
தமிழக கியூ பிரிவுப் போலீசார் கடந்த சில தினங்களாக தமீம் அன்சாரியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தனர். அவர் தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளைப் படம் பிடித்து சி.டி.யாக தயாரித்து வைத்திருப்பதை அறிந்தனர். அந்த சி.டி.க்களுடன் நேற்று அவர் இலங்கை புறப்பட்டு செல்வது கியூ பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது.
திருச்சி விமான நிலையத்துக்கு தமீன் அன்சாரி வந்து கொண்டிருந்தபோது திருச்சி கியூ பிரிவு போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரது உடமைகளை சோதித்துப் பார்த்தபோது அவற்றில் சி.டி.க்கள், புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தஞ்சை, அதிராம்பட்டினத்தில் உள்ள 'லபீர் எக்ஸ் போர்ட்ஸ்' என்ற தமீம் அன்சாரியின் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்கள் அனைத்தும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும், தமீம் அன்சாரிக்கும் ரகசிய தொடர்பு இருப்பதை உறுதிபடுத்தின.
இதையடுத்து இந்திய உளவு அமைப்பின் மூத்த அதிகாரிகள் தமீம் அன்சாரியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
தமீம் அன்சாரி தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தி வந்தார். முதலில் அந்த நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கியது.
கடந்த சில மாதங்களாக தமீம் அன்சாரி தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டம் உண்டானது. மிகக்குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதித்து கோடீசுவரனாகி விடவேண்டும் என்ற கனவில் இருந்த அன்சாரியால், தொழில் நஷ்டத்தை தாங்கிக் கொள்ள இயலவில்லை.
இந்த சமயத்தில் தமீம் அன்சாரிக்கு, இலங்கை வாழ் தமிழரான ஹாஜி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் கை நிறைய பணம் கிடைக்க வழி காட்டுவதாக கூறி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு அழைத்து சென்றார்.
அந்த தூதரகத்தில் மூத்த அதிகாரியாக அமீர் ஜுபைர் சித்திக் என்பவர் உள்ளார். இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யில் ஒரு உறுப்பினர் என்று கூறப்படுகிறது. இவர் தமீம் அன்சாரியிடம், தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்து படம் பிடித்து தந்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறினார்.
பணத்துக்கு ஆசைப்பட்ட தமீம் அன்சாரி நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலுக்கு சம்மதித்தார். தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை படம் பிடித்து, அவற்றை சி.டி.யில் பதிவு செய்து, அந்த சி.டி.க்களை கொழும்பு தூதரகத்தில் உள்ள இளநிலை அதிகாரி சாஜியிடம் கொடுத்தால் போதும் என்று தமீம் அன் சாரியிடம் கூறப்பட்டது.
அதன்படி கடந்த சில மாதங்களாக தமீம் அன்சாரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை, காரைக்கால், மல்லிப்பட்டினம் பகுதிகளை படம் பிடித்து சி.டி.யாக தயாரித்தார். தமிழ்நாட்டு கடலோர பகுதிகளில் எங்கெங்கு ராணுவ நிலைகள் உள்ளன? எங்கெங்கு மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது? எந்த பகுதியில் இறங்கினால் விரைவில் ஊருக்குள் செல்ல முடியும் என்பன போன்ற தகவல்களை அறியும் வகையில் அந்த சி.டி.க்களில் காட்சிகள் இருந்தன.
தமீன் அன்சாரியிடம் இருந்த ஆவணங்களில் 2 டி.வி.டி.க்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதில் ஒரு டி.வி.டி. யில், நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ மையம், நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் தென்மாவட்ட கடலோர பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருந்தன.
மற்றொரு டி.வி.டி.யில் இந்திய ராணுவ வீரர்கள் பாரா-கிளைடிங் பயிற்சி காட்சிகள், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு இடம் பெற்றிருந்தன. வெலிங்டன் ராணுவ மையத்தின் முழு விவரமும் அந்த டி.வி.டி.யில் பதிவாகி இருப்பதைக் கண்டு மத்திய உளவுத்துறை மூத்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக மும்பை நகருக்குள் ஊடுருவிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்கள் நடத்தி 166 பேரை கொன்று குவித்தனர். அதே பாணியில் கடல் வழியாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவுவதற்காக, தமீம் அன்சாரி மூலம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தகவல்களை திரட்டி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில், எந்த பகுதியில் தீவிரவாதிகள் வந்து இறங்க முடியும் என்பதை தமீம் அன்சாரி வீடியோ படம் எடுத்து டி.வி.டி.யாக தயாரித்து இருப்பதன் மூலம் ஐ.எஸ்.ஐ. சதி திட்டம் அம்பலமாகி உள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பிறகு தீவிரவாதிகள் எந்தெந்த வழிகளில் தப்பிச் செல்ல முடியும் என்பதற்கான பகுதிகளையும் தமீம் அன்சாரி படம் பிடித்து டி.வி.டி.யில் பதிவு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழக கடலோர துறைமுகங்களை தாக்கி அழித்து விட்டு, தீவிரவாதிகள் தப்பிச் செல்வதற்கான வழிகளை தமீம் அன்சாரி தன் டி.வி.டி.யில் பதிவு செய்து இருப்பதை கண்டு மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டதாக பெயர் வெளியிட விரும்பாத கியூ பிரிவு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளை படம் பிடித்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக விசாகப்பட்டினம் துறைமுகத்தின் சில பகுதிகளையும், விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கி கப்பல் உள்ள பகுதிகளையும் படம் பிடிக்குமாறு தமீம் அன்சாரிக்கு கொழும்பு தூதரக அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதற்காக தமீம் அன்சாரி அடுத்த வாரம் விசாகப்பட்டினம் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தை படம் எடுத்த பிறகு கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தை வீடியோவில் முழுமையாக பதிவு செய்து தர தமீம் அன்சாரியிடம் ஐ.எஸ்.ஐ. தரப்பில் கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதன் மூலம் தென் இந்தியாவில் உள்ள எல்லா ராணுவ நிலைகள் மீதும் பாகிஸ்தான் குறி வைத்திருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட மாணவர் அமைப்பு செயலாளராக இருந்த தமீம் அன்சாரி சில மாதங்கள் மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாகவும் பணியாற்றினார்.
இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதி தொழிலை தொடங்கிய பிறகே இவருக்கு ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. வங்கியில் இவர் வைத்திருந்த டெபிட் கார்டு கணக்கு எண்ணுக்கு சமீபகாலமாக இலங்கையில் இருந்து லட்சம், லட்சமாக பணம் போடப்பட்டது.
வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்ட மதிப்பைவிட அதிக அளவில் பல லட்சம் பணம் போடப்பட்டதால் மத்திய உளவுத் துறை சந்தேகத்துடன் தமீம் அன்சாரியை பார்த்தது. அவருக்குத் தெரியாமல் உளவுத்துறை அதிகாரிகள் பின் தொடர்ந்தபோதுதான் தமீம் அன்சாரி நாட்டுக்கு துரோகம் செய்வதை கண்டுபிடித்தனர். அந்த வகையில் தமீன் அன்சாரியின் டெபிட் கார்டே அவரைக் காட்டிக் கொடுத்து விட்டது.
தமீம் அன்சாரி பற்றி உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நமது நாட்டின் அணு நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வர்ஷா நிலை கொண்டுள்ள விசாகப்பட்டினம் துறைமுக பகுதியை படம் பிடிக்க இருந்தனர். அதை பார்க்கும் போது தமீம் அன்சாரி எந்த அளவுக்கு ஆபத்தானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவில் பிடிபட்ட டேவிட் ஹெட்லியும், நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தை படம் பிடித்து வைத்திருந்தான். அவனுக்கும், தமீம் அன்சாரிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இவன் மூலம் மிகப்பெரிய நாசவேலை சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்றார்.
ரகசிய உளவாளியான தமீம் அன்சாரி சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மாணவர் பிரிவில் பொறுப்பாளராக இருந்தார். திருமணமாகி விட்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார். தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டது பற்றி அவர் குடும்பத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டனர். தங்களது வக்கீல் பிரியா சுவாமிநாதன் எல்லா தகவல்களையும் தெரிவிப்பார் என்றனர்.
வக்கீல் பிரியா சுவாமிநாதன் கூறியதாவது:-
அன்சாரி சினிமா படம் தயாரிக்க விரும்பினார். அதற்காகவே அவர் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மற்றும் பயிற்சி பெறும் காட்சிகளை இணையத்தளங்களில் இருந்து டவுன் லோடு செய்து சி.டி.யாக தயாரித்து வைத்திருந்தார். அந்த காட்சிகளை திருச்சியில் உள்ள ஒரு படத் தயாரிப்பாளரிடம் காட்ட முடிவு செய்திருந்தார்.
'பேராண்மை' படத்தில் வருவது போன்று காட்சிகளை படமாக்கப் போவதாக என்னிடம் விளக்கி கூறினார். தமீம் அன்சாரி ரோட்டரி கிளப்பில் உறுப்பினராக உள்ளார். ரோட்டரி நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மூளை வளர்ச்சி அடையாத குழந்தைகள் பலருக்கு உதவி செய்துள்ளார். அவர் ஐ.எஸ்.ஐ.க்கு உதவி செய்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். அதன்பிறகு அவரை ஜாமீனில் எடுக்க மனுதாக்கல் செய்வேன்.
இவ்வாறு வக்கீல் பிரியா சுவாமிநாதன் கூறினார்.
தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தஞ்சை நிர்வாகிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை குழு உறுப்பினர் சீனிவாசன் கூறுகையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது போன்று அவர் தன்னை வெளிகாட்டிக் கொண்டதே இல்லை. அவரது பெற்றோர்கள் மிகவும் நல்லவர்கள். கட்சி மீது மிகுந்த பற்றுதலும் மரியாதையும் உடையவர�¯ �கள் என்றார்.
தமீம்அன்சாரியின் தந்தை வெளிநாட்டில் உள்ளார். அவர் பல தடவை அன்சாரியை தம்முடன் வந்து விடுமாறு அழைத்தார். ஆனால் அன்சாரி அதை ஏற்கவில்லை. அன்சாரி அடிக்கடி சிங்கப்பூர், மாலத்தீவு, இலங்கைக்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது. எனவே இவர் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன தமீம் அன்சாரி தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தஞ்சை நகரில் கடைகள், வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலையும் செய்து வந்துள்ளார். அவருக்கு மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் உதவி செய்தது தெரிய வந்துள்ளது. அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
தென்இந்தியாவில் மிக நேர்த்தியான தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ. தமீம் அன்சாரி உதவியுடன் சதித்திட்டம் தீட்டி வந்தது. அந்த திட்டம் சரியான நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. அடுத்து, உளவுத்துறையினரும், விசாரணைக் குழுவினரும் கொழும்பு சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கைதான தமீம் அன்சாரி மீது அரசாங்க ரகசியங்களை கடத்தியதாக 3, 4 மற்றும் 9 ஆகிய 1923 ஆம் ஆண்டு சட்டப்பிரிவின் கீழும், வெளிநாட்டுக்காக சதி செய்தல் 120 பி ஆகிய இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2 ல் ஆஜர்படுத்தப்பட்ட தமீம் அன்சாரியை வருகிற 1-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.
கியூ பிரிவு போலீசார் தமீம் அன்சாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்போது அவருக்கு உதவிய முன்னாள் ராணுவ அதிகாரி பற்றிய தகவல் வெளிவரும்.
Post a Comment