முன்னாள் உலக அழகி யுக்தா முகி. இவர் 1999-ம் ஆண்டு தனது 20-வது வயதில் உலக அழகி பட்டத்தை பெற்றார். இதைத் தொடர்ந்து பல்வேறு இந்தி படங்களில் நடித்தார். யுக்தா முகிக்கும், அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் பிரின்ஸ் டுலிக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு கன்வால் முகி என்ற குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் யுக்தா முகி தனது கணவர் மீது மும்பை போலீசில் புகார் செய்து உள்ளார். புகாரில், கணவர் தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்து இருக்கிறார். இந்த புகாரை தொடர்ந்து அவரது கணவர் மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ் அம்போலி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதால், எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகள் கோர்ட்டு அனுமதி அல்லது உத்தரவின்றி போலீசார் செய்ய முடியாது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், யுக்தா முகி கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவரது கணவர் மீது புகார் கொடுத்தார். இந்த வழக்கில் தண்டனைக்குரிய நடவடிக்கைக்காக அவர் கோர்ட்டை அணுகலாம் என்றார். முன்னாள் உலக அழகி ஒருவர் கணவர் மீது போலீசில் புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment