முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தை வாக்கிங் போனபோது கடத்தியதாக கூறப்படுவது தவறு என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் பரபரப்பாக கூறுகின்றன. முதல் நாள் இரவே அவரை கடத்தி விட்டதாகவும், கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்திருப்பதாகவும் அந்த ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரது உடலில் முக்கியப் பகுதி சிதைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது.
ராமஜெயம் கொலை வழக்கில் ஏகப்பட்ட திருப்பங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் காலையில் வாக்கிங் போனபோது கடத்திச் சென்றதாகவும், பின்னர் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதில் தற்போது ஏகப்பட்ட மாற்றங்கள் இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்ட அன்று காலை 3, 4, 4.30 ஆகிய மணிகளிலும், காலை 8.10 மணியளவிலும், ராமஜெயத்தின் செல்போனிலிருந்து அவரது மனைவி, அவருக்குச் சொந்தமான கல்லூரி ஆகியோருக்குப் போன் போயுள்ளது. இது போலீஸாரைக் குழப்பியுள்ளது.
அம்மா மண்டபம் பகுதியிலிருந்துதான் இந்த செல்போன் அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசிய நபர் நேருவின் எண்ணைக் கேட்டே இத்தனை அழைப்புகளையும் செய்துள்ளார்.
யாருமே அதிகாலை 3 மணிக்கு வாக்கிங் போக வாய்ப்பில்லை. எனவே காலை 6 மணியளவில் ராமஜெயம் வாக்கிங் போனதாகவும் பின்னர் திரும்பி வரவில்லை என்றும் அவரது குடும்பத்தார் தரப்பில் கொடுத்த புகார் குறித்து தீவிரமாக விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து மேலும் பல பரபரப்புத் தகவல்களும் போலீஸ் தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, உண்மையில் ராமஜெயத்தை முதல் நாள் இரவே கடத்தி விட்டனர். அவர் கடத்தப்பட்ட இடம், வேறு ஒரு வீடாகும். அந்த வீட்டில் அவர் இரவு தங்கியிருந்தபோதுதான் அங்கு வந்து கடத்தியுள்ளனர்.
பின்னர் இரவு முழுவதும் அவரை சித்திரவதை செய்ததாக தெரிகிறது. அதில்தான் அவர் மரணமடைந்தார். அவரது உடலிலிருந்து ஒரு முக்கிய உறுப்பையும் துண்டித்துள்ளனர். இது பிரேதப் பரிசோதனையின்போது தெரிய வந்தது.
பின்னர்தான் அவரது அண்ணன் நேருவுக்குத் தகவல் தெரிவித்து அவரை எச்சரிக்கும் வகையில் பேசுவதற்காக தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் நேருவை அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.
இந்த வழக்கில் பல முக்கிய துப்பு கிடைத்துள்ளன. இதை வைத்து விரைவில் கொலையாளிகளைப் பிடிப்போம்.
வழக்கு தொடர்பாக விரைவில் ராமஜெயத்தின் மனைவி லதா, உறவினர் அனுராதா, கல்லூரி ஊழியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் முக்கிய விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மேலும் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தவுள்ளோம் என்று கூறினர்.
ராமஜெயம் படுகொலை வழக்கில் விரைவில் துப்பு துலங்கும் என்று போலீஸ் தரப்பில் நம்பிக்கையுடன் கூறப்படுகிறது.
Post a Comment