News Update :
Home » » இலங்கை போரின்போது உண்ணாவிரதம் இருந்தது கபட நாடகமா?: கருணாநிதி பதில்

இலங்கை போரின்போது உண்ணாவிரதம் இருந்தது கபட நாடகமா?: கருணாநிதி பதில்

Penulis : karthik on Wednesday 21 March 2012 | 01:21

 
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா என்னதான் முதலமைச்சர் பதவியிலே அமர்ந்திருந்தாலும், அவரது நினைவெல்லாம் நிறைந்திருப்பது தி.மு.க. மீதுதான். அது சங்கரன்கோவில் இடைத்தேர்தலாக இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையாக இருந்தாலும் தி.மு.க. வையும், என்னையும் கடுமையாகத் தாக்கி, அதை 'கபட நாடகம்' என்று வர்ணிக்காமல் அவரால் இருக்க முடியாது.
 
இலங்கை ராணுவத்தால் நமது இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக மத்திய அரசு அதிலே தாமதமின்றித் தலையிட்டு போர் நிறுத்தம் செய்திட வேண்டுமென்று கேட்டு, நான் விடியற்காலை 5.45 மணியளவில் கட்சிக்காரர்களோ, உதவியாளர்களோ கூட உடன்வராத நிலையில் தனியாக அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் தொடங்கியதை பின்னர் அங்கே வந்த செய்தியாளர்கள் எல்லாம் அறிவார்கள்.
 
நான் அங்கே உண்ணாவிரதம் இருக்கும் செய்தி வெளியே தெரிய ஆரம்பித்த பிறகுதான் அதிகாரிகளும், கழகத்தோழர்களும் அங்கே வந்தார்கள். அதன் பின்னர்தான் நான் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி டெல்லி வரை சென்று, மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கும், சோனியாகாந்தியும் தலையிட்டு என்னிடம் இலங்கையிலே உள்ள நிலை குறித்து விளக்கி என் உடல் நிலை கருதி உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
 
அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 27-4-2009 அன்று நான் உண்ணாவிரதம் இருந்தபோது விடுத்த அறிக்கையில், ''போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்கு கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள், இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
 
குடிமக்களை மீட்பதற்கும் அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்பு படைகள் இனி கவனம் செலுத்தும். போர் முனையில் சிக்கிக்கொண்டுள்ள தமிழ்க் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவையாகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல்படியாகும்'' என்று தெரிவித்ததையொட்டித்தான் அன்று பிற்பகலில் எனது உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றேன்.
 
இப்போதும் அமெரிக்க தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க முன் வரவில்லை என்றால், தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும், அதிலே நானும் பங்கேற்பேன் என்றும் அறிவித்தேன். மத்திய அமைச்சரவையிலிருந்தே தி.மு.க. அமைச்சர்கள் விலகுவார்கள் என்றும் தீர்மானம் எழுதி உயர்நிலைச் செயல் திட்டக்குழுவிலே நிறைவேற்றுவதாக இருந்தேன். ஆனால் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு என்ன செய்தார்?
 
தி.மு.க. ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது, பிரதமருக்கு நான் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? நேரிலே சென்று பிரதமரிடம் எடுத்துக்கூற வேண்டாமா என்று எத்தனை அறிக்கைகளிலே ஜெயலலிதா என் மீது தாக்குதல் தொடுத்தார்?.
 
தற்போது ஏன் ஜெயலலிதா, முக்கியமான பிரச்சினைகளிலே கூட முதலமைச்சர் என்ற முறையிலே டெல்லி சென்று பிரதமரிடம் முறையிடவில்லை? அதற்கு மாறாக பிரதமரே கருணாநிதியின் கபட நாடகத்திற்கு துணை போகின்ற அளவிற்கு நடந்து கொள்கிறார் என்று அவதூறு அறிக்கை விடுகிறார் என்றால் அது நாடாளுமன்ற நடவடிக்கைகளையே அவமதிக்கின்ற செயலாகும்.
பிரதமர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பாக கழக உயர்நிலை செயல் திட்டக்குழு கூடும் என்பதும், மாநில அளவில் தி.மு. கழகம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் என்பதும், அதிலே நான் பங்கேற்பதும் செய்தியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது.
 
ஆனால் தற்போது, பாரதப் பிரதமர் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறியதை வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நான் கைவிட்டு விட்டேன் என்கிறார் ஜெயலலிதா. பிரதமரின் பேச்சின்போது தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏன் அ.தி.மு.க. வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட வரவேற்று மேசையைத் தட்டியதை தொலைக்காட்சியிலேயே காட்டினார்கள்.
 
பழ. நெடுமாறன் போன்றவர்கள் தமிழகம் முழுவதும் 23-ம் தேதி நடத்த விருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கூட திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மட்டும் பிரதமர் தெளிவற்ற பதிலைக்கூறியதாக அறிக்கை விடுத்துள்ளார். அது வருத்தத்திற்குரியது என்று கூறியதோடு, தேவையில்லாமல் நான் ஏதோ துரோகம் இழைத்து விட்டதாகவும், கபட நாடகத்தை அரங்கேற்றாமல் இருக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா சாடியிருப்பது தமிழக மக்களை திசை திருப்ப முயற்சிப்பதை எடுத்துக்காட்டுகிறது.
 
அதுபோலவே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும் என்ற முடிவினையும் ஜெயலலிதா எடுத்துள்ளார். கூடங்குளம் கடந்த ஆறு மாதங்களாக மூடிக்கிடக்க யார் காரணம்? போராட்டக்குழுவினரை ஜெயலலிதா அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை ஏற்று 22-9-2011 அன்று நடைபெற்ற அமைச்சரவையிலே கூடங்குளம் அணு நிலைய பணிகளை நிறுத்திவைக்குமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதால் தானே கடந்த ஆறு மாதமாக அந்த அணுமின் நிலையம் மூடப்பட்டு, தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்டு, இருள்சூடி நந்ததோடு, கடந்த ஆறுமாத காலமாக அந்த கூடங்குளம் நிலையம் மூடப்பட்டு அலுவலர்களுக்கெல்லாம் பணியே இல்லாமல் ஊதியம் கொடுத்த அளவிலே மட்டும் 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படக் காரணம் யார்? அது மாத்திரமல்ல, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசே ஊக்கம் கொடுத்த காரணத்தால், அப்பாவிப் பொதுமக்கள் ஏமாந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை கூடங்குளம் பகுதி மக்கள்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.
 
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger