News Update :
Home » » இலங்கை தீர்மானத்தில் ஓட்டளிக்காமல் தி.மு.க., நழுவல்: அ.தி.மு.க., இடதுசாரிகள் கிடுக்கிப்பிடி

இலங்கை தீர்மானத்தில் ஓட்டளிக்காமல் தி.மு.க., நழுவல்: அ.தி.மு.க., இடதுசாரிகள் கிடுக்கிப்பிடி

Penulis : karthik on Wednesday, 21 March 2012 | 04:25

ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க., ஆதரிக்கவில்லை. மாறாக, தி.மு.க., எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் வெளிநடப்பு செய்தனர்.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முடிவில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ராஜ்யசபாவில் பதிலளித்து பேசினார். பின்னர் ஜனாதிபதி உரையில் குறிப்பிட்ட, சில விஷயங்கள் மீது திருத்தம் கோரி எதிர்க் கட்சிகள் கொண்டு வந்திருந்த தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த விவாதத்தில், அரசு வெற்றி பெற்றது. அதையொட்டி, எதிர்க் கட்சிகள் சபையில் வெளியேறிய பின், இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்படும் தீர்மானம் குறித்த விஷயம் வந்தது. மிக முக்கியமான இந்த தீர்மானம் அவையில் வந்த போது எதிர்க் கட்சி வரிசை முழுக்க காலியாக இருந்தது.பின்னர், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மற்றும் போர்க் குற்றங்கள் பற்றியும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கச்சத்தீவு விவகாரம் பற்றியெல்லாம் ஜனாதிபதி உரையில் திருத்தம் கோரி, ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மைத்ரேயன், பாலகங்கா, இளவரசன், ரபிபெர்னாட் ஆகிய நான்கு பேர் சபையில் இருந்தனர். தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.,யான ராஜா கொண்டு வந்திருந்தாலும், இதன் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென்பதில், அ.தி.மு.க., குறியாக இருந்தது.பரபரப்பு:இந்த சமயத்தில் தி.மு.க., எம்.பி.,க்கள் பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தனர். சட்டென எழுந்த திருச்சி சிவா, "பிரதமர் கூறியிருக்கின்ற வாக்குறுதியை முழுமையாக நம்புகிறோம். தவிர தீர்மானம் வர இன்னும் நாட்கள் உள்ளன. நல்லதே நடக்கும் என நம்புகிறோம்' என்றார். அ.தி.மு.க,, மற்றும் இடதுசாரிகள் கிடுக்கிப்பிடியில், தி.மு.க.,வின் நிலை
என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு கிளம்பியது.அவைத் தலைவர் ரகுமான்கான், "குரல் ஓட்டெடுப்பு மூலம் முடித்துக் கொள்ளலாம்' என, மைத்ரேயனிடம் கேட்டுப் பார்த்தார். ஆனால் நடக்கவில்லை.ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சர் வாசன் எழுந்து, "தமிழகம் அமைதியாக உள்ளது. மிக முக்கியமான இந்த பிரச்னையில், அரசியலை கலந்து மேலும் தீவிரமாக்குவதை அ.தி.மு.க., தவிர்க்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார். அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஏற்க மறுத்து விட்டனர்.பிறகு காங்கிரஸ் எம்.பி.,யான ஞானதேசிகன் எழுந்து, "இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானம் குறித்து பிரதமர் தெளிவாக விளக்கி விட்டார். மிகுந்த திருப்தியளிக்கும் விதத்தில் இருந்த பிரதமரின் வாக்குறுதியை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே வரவேற்றுள்ளன. இச்சூழ்நிலையில்...' என தொடர ஆரம்பித்தார். அவ்வளவு தான்.அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஆவேசமடைந்து விட்டனர்.
பாலகங்கா எழுந்து, "யார் சொன்னது அப்படி? பிரதமரின் அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அனைத்து கட்சிகளும் வரவேற்றன என எதை வைத்து கூறுகிறீர்கள். யார் உங்களுக்கு அந்த உரிமையை அளித்தது' என ஆவேசப்பட்டார். மற்றவர்களும் இவரோடு சேர்ந்து கடுமையாக குரல் கொடுத்தனர்.அந்த சமயத்திலும் மைத்ரேயனை பார்த்து துணைத் தலைவர் ரகுமான்கான் "ஓரிருவர் தானே உள்ளீர்கள். எதற்கு ஓட்டெடுப்பு' என கூறி, எவ்வளவோ சமாதானப்படுத்தினார். ஆனால், முற்றிலுமாக மறுத்த மைத்ரேயன் தொடர்ந்து, "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் பிரதமர் அளிப்பது நழுவலான பதில். நேற்றும் நழுவினார். இன்றும் நழுவுகிறார். நாளையும் நழுவவே செய்வார். போர்க் குற்றங்கள் என்று கூட குறிப்பிடாமல் மனித உரிமை மீறல் என மழுப்புவதை அ.தி.மு.க., ஏற்காது. தீர்மானம் தோற்றாலும் கூட பரவாயில்லை. தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்னை. இதில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இங்குள்ளவர்களின் உண்மை முகங்கள் உலகத்திற்கு தெரிய வேண்டும். ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். நான் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப் போட்டாக வேண்டும்' என்று ஆவேசமானார்.பங்கேற்கவில்லை15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த களேபரங்கள் நடந்தன. அவையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் இருந்தார். இறுதியில் ஓட்டெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத தி.மு.க., எம்.பி.,க்கள் சிவா, கனிமொழி, செல்வ கணபதி, ராமலிங்கம், வசந்தி ஸ்டான்லி உள்ளிட்டோர் அவையை விட்டு நழுவி வெளியேறினர். காரணம் ஏதும் கூறவும் இல்லை. ஓட்டெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு ஆதரவாக ஒன்பது ஓட்டுகளும், எதிர்ப்பாக 84 ஓட்டுகளும் விழுந்தன.தி.மு.க., ஆதரிக்காதது ஏன்? ராஜ்யசபாவில் நேற்று இலங்கை குறித்த மிக முக்கியதீர்மானம் கொண்டு வரப்பட்டதும், அதில் தி.முக., பங்கேற்காமல் தவிர்த்தது குறித்து, அ.தி.மு.க.,வின் ராஜ்ய சபா தலைவர் மைத்ரேயன் தெரிவித்த கருத்து:போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்பது தான் தமிழர்களின் கோரிக்கை. இந்த மையப் புள்ளியை விட்டு தந்திரமாக நழுவுகின்றன காங்கிரசும், தி.மு.க.,வும். போர்க் குற்றங்கள் குறித்த திருத்தங்கள் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்தும், கச்சத் தீவை மீட்பது குறித்தும் ஜனாதிபதி உரையில் கேட்ட திருத்தத்தை தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்.பி.,க்கள் ஆதரிக்க வேண்டுமா, வேண்டாமா?இன்று தி.மு.க., புறக்கணித்து ஓடி விட்டது. பிரதமரின் அறிக்கையை பார்த்து விட்டு நேற்று வெற்றி... வெற்றி... வெற்றி... என சந்தோஷத்தில் கூத்தாடியவர்கள் இன்று தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும் அல்லவா? ஏனிந்த இரட்டை வேடம்?இந்த ஓட்டெடுப்பில் பிரதமர் மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் அவையில் இருந்து திருத்தத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டுள்ளனர்.இவ்வாறு மைத்ரேயன் கூறினார்
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger