நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் ஆபரேஷன் போல் அனைவரையும் கொல்ல காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இடிந்தகரையில் உள்ள லூர்து மாதா ஆலயத்தில் 10 கிராம மக்களுடன் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இன்று 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் கூட்டத்தை போல் எங்களை மத்திய, மாநில அரசுகள் பிடித்து வைத்துள்ளதாக கூறினார்.
இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் ஆபரேஷன் நடத்த காவல்துறை திட்டமிட்டிருப்பதாகவும் உதயகுமார் பகீர் தகவலை தெரிவித்தார்.
மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார வசதியின்றி மக்கள் தவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களை போலீஸ் தடுத்துவிட்டதாக கூறிய உதயகுமார், செல்போன் இணைப்புகளையும் துண்டிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எங்களை சந்திக்க வந்த வழக்கறிஞர்களை காவல்துறை தடுத்துவிட்டதாகவும், செய்தியாளர்களை உள்ளே விட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் உதயகுமார் கூறினார்.
தமிழகத்தில் நடப்பது அரசாங்கமா? அல்லது பாசிச ஆட்சியா என்று உதயகுமார் வினா எழுப்பினார்.
மக்களுக்கு பயத்தையும், பீதியையும் காவல்துறை ஏற்படுத்துவதாகவும், இது முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னுடைய பள்ளியை 50 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியுள்ளதாகவும், பள்ளியையே அடித்து நொறுக்கும் அரசாங்கம், எப்படி, படிக்கும் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்று உதயகுமார் வினா எழுப்பினார்.
நாங்கள் யாரும் தனியாக வர மாட்டோம், அனைவரும் கைதாக தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment