ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் உள்ள கோலிவுட்டில் நடிப்பதில் பெருமையாக உள்ளது என்று ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த தன்வி கணேஷ் லோன்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்டூடண்ட் ஸ்டூடியோ காம் தயாரிக்கும் காதல் தீவு படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சிறுவயது நாயகியாக நடித்த தன்வி லோன்கர் இதில் நாயகியாக நடிக்கிறார். அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக வந்த ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தின் இயக்குனர் வெற்றி வீரன் இயக்குகிறார்.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி விருகம்பாக்கத்தில் உள்ள நேஷனல் தியேட்டரில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட தன்வி லோன்கருக்கு நடிகர்கள் சத்யராஜ், பிரசன்னா, நடிகை தன்ஷிகா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினர்.
பின்னர் தன்வி லோன்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவள். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். அந்த படத்தின் நாயகி ப்ரீடா பின்டோ ஆஸ்கர் விருது விழாவுக்கு என்னை அழைத்துச் சென்றார். அப்போது உலகின் பெரிய நடிகர்-நடிகைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தை அடுத்து டீன் ஏஜ் என்ற கன்னட படத்தில் நடித்தேன். அந்த படத்தை பார்த்து தான் தற்போது எனக்கு காதல் தீவு என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் மாணவியாக நடிக்கிறேன். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள கதாபாத்திரம் கிடைத்துள்ளது.
நான் வடநாட்டு பெண் என்றாலும் எனக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அங்கு வாரிசு நடிகர்-நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் நாயகி வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல.
சினிமா பின்னணி இருந்தால் தான் பாலிவுட்டில் நுழைய முடியும். ஆனால் கோலிவுட்டில் அப்படியல்ல. நான் தமிழ் பட உலகம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உலகப் புகழ் பெற்ற ரஜினிகாந்தும், தமிழில் இருந்து இந்திக்கு வந்து புகழ் கொடி நாட்டிய கமல் ஹாசனும் இங்கே தான் இருக்கின்றனர். அப்பேர்பட்ட கோலிவுட்டில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.
இங்கு திறமையை மதிக்கிறார்கள். அசின், ஜெனிலியா போன்ற நடிகைகள் இங்கிருந்து பாலிவுட்டுக்கு வந்து பிரபலமாகியுள்ளனர். நான் விரைவில் தமிழில் நம்பர் 1 இடத்தை பிடிப்பேன். அதற்காக தமிழ் கற்றுக்கொள்ளப் போகிறேன் என்றார்.
Post a Comment