சிட்னி என்றாலே இந்திய அணியை பொறுத்தவரை சர்ச்சை என்றாகி விட்டது. 2008-ம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்டின் போது ஹர்பஜன்சிங், சைமண்ட்சை குரங்கு என்று திட்டியதாக பூதாகரமாக வெடித்த பிரச்சினையை யாரும் மறந்து விட முடியாது.
அதே சிட்னி மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் போட்டியின் போது இரு சர்ச்சைக்குரிய விஷயங்கள் அரங்கேறின. 24-வது ஓவரின் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் ஷார்ட் கவர் திசையில் பந்தை அடித்து விட்டு, டேவிட் ஹஸ்ஸியை ஒரு ரன்னுக்கு அழைத்தார். இதற்குள் பீல்டிங் செய்த சுரேஷ் ரெய்னா, பந்தை ஸ்டெம்பை நோக்கி மின்னல் வேகத்தில் எறிந்தார்.
அப்போது வேகமாக ஓடி வந்த டேவிட் ஹஸ்ஸி பந்தை வலது கையால் தடுத்து விட்டார். அவர் தடுக்காமல் இருந்திருந்தால் பந்து ஸ்டம்பை பதம் பார்த்து ரன்-அவுட் ஆகியிருக்கலாம். பீல்டிங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேட்ஸ்மேன்கள் செயல்படும் போது அவுட் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) விதியில் இடம் உள்ளது.
இதையடுத்து இந்திய கேப்டன் டோனி மற்றும் சக வீரர்கள், நடுவர்கள் பில்லி பவுட்டன் (நியூசிலாந்து), சைமன் டபெல் (ஆஸ்திரேலியா) இருவரிடமும் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் கேட்டு முறையிட்டு, வாக்குவாதம் செய்தனர். பின்னர் முடிவு 3-வது நடுவர் சிமோன் பிரை (ஆஸ்திரேலியா) வசம் விடப்பட்டது. அவர் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக நாட்-அவுட் வழங்கியதால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அப்போது 17 ரன்களில் இருந்த டேவிட் ஹஸ்ஸி, அதன் பிறகு இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை அடித்தார். அவர் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கில் பந்தை தடுக்கவில்லை. காயமடைந்து விடக்கூடாது என்பதற்காகவே பந்தை தடுத்தார் என்பது நடுவர்கள் தரப்பு விளக்கமாகும்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், இயான் சேப்பல் மற்றும் டோனி கிரேக் ஆகியோர் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் வழங்கியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இப்படி நடுவரின் முடிவு சரியா-தவறா? என்று விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில், இந்தியா பேட் செய்த போது மீண்டும் இதே போன்ற சம்பவம் நடந்தது. தெண்டுல்கர் 14 ரன்களில் எதிர்முனையில் நின்ற போது, கவுதம் கம்பீர், பாயிண்ட் திசையில் பந்தை அடித்து விட்டு ஒரு ரன்னுக்கு ஓடினார். துரிதமாக கிரீசை நோக்கி தெண்டுல்கர் ஓடிய போது, ஸ்டம்பில் இருந்து சில அடி தூரத்தில் பந்து வீசிய பிரெட்லீ குறுக்கீடுவது போல் வழியில் நின்றார். இதனால் அவர் மீது மோதாமல் இருக்க தெண்டுல்கர் சற்று விலகி ஓட நேர்ந்தது. இதற்குள் டேவிட் வார்னர் அவரை ரன்-அவுட் செய்து விட்டார்.
பிரெட்லீயின் குறுக்கீடு இல்லாமல் தெண்டுல்கர் ஓடியிருந்தால் ரன்-அவுட்டில் இருந்து தப்பியிப்பார். ஆட்டத்தின் முடிவும் மாறியிருக்கலாம். லெக் அம்பயர் சைமன் டபெல் விரலை உயர்த்தியதும் அதிர்ச்சி அடைந்த தெண்டுல்கர், ஏதோ சொல்லி கொண்டே பெவிலியன் திரும்பினார்.
நடுவர்களின் பாதகமான தீர்ப்புகள் குறித்து இந்திய கேப்டன் டோனி கூறியதாவது:-
தெண்டுல்கரின் ரன்-அவுட் விவகாரத்தில், பிரிஸ்பேன் ஆட்டத்தில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பிப்.19-ந்தேதி) நடந்த விஷயத்தை உதாரணமாக சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அந்த ஆட்டத்தில் வினய்குமார் பந்து வீசிய போது, ஸ்லிப்பில் பீல்டர்களை நிறுத்தியிருந்தோம். மிட் விக்கெட் திசையில் பீல்டர் இல்லை. அவர் வீசிய பந்து பாயிண்ட் திசைக்கு அடிக்கப்பட்டது. உடனே அவர், பிட்ச்சை கடந்து மிட்விக்கெட் நோக்கி ஓடி வந்தார். அப்போது நடுவர், விதிப்படி இதை செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை என்று வினய்குமாரிடம் கூறினார்.
எனவே பந்து வீசிய பிரெட்லீ பாயிண்ட் திசை பீல்டர் நோக்கி சென்றார் என்று சொல்லி நியாயப்படுத்த முடியாது. உண்மையிலேயே தெண்டுல்கர் செல்லும் வழியில் அவருக்கு எந்த வேலையும் இல்லை. தெண்டுல்கர் சில அடி தூரம் கூடுதலாக ஓட வேண்டும் என்பது அவரது நோக்கம். அப்படி பார்க்கையில் ரன்-அவுட் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் அவர் வழியில் நின்றிருக்கிறார் என்பது எனது கணிப்பாகும்.
இதனால் தெண்டுல்கர் உண்மையிலேயே ஏமாற்றத்திற்குள்ளானார். இந்த விஷயத்தில் லெக் அம்பயர் (டபெல்) அவுட் கொடுத்தது தவறானதாகும். ஏனெனில் அவுட் ஆகிய விதத்தில் சரியாக கணிக்க கூடிய இடத்தில் மற்றொரு நடுவர் பில்லி பவுட்டன் தான் இருந்தார். லெக் அம்பயர் டபெல் நின்ற கோணத்தில் இருந்தபடி இந்த அவுட்டை கணிப்பது கடினமாகும்.
எனவே பவுட்டன், லெக் அம்பயரிடம் இது பற்றி சொல்லியிருக்க வேண்டும். இதே போல் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் வழங்கியிருக்க வேண்டும். அவுட் கொடுக்கப்படாதது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். அவர் முகத்தில் பந்து படாமல் இருக்க தடுத்ததாக நினைக்கலாம். ஆனால் பந்தை முகத்தின் அருகில் வைத்து தடுக்கவில்லை. இரண்டுக்கும் நிறைய இடைவெளி இருந்தது. அப்படி இருந்தும் அவருக்கு ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.
நாங்கள் 2006-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த போது, இன்ஜமாம் உல்-ஹக் இதே போன்று அவரை நோக்கி பந்து எறியப்பட்ட போது, முகத்தில் படாமல் இருக்க பேட்டை வைத்து தடுத்ததாக கூறிய போதும், அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. மொத்தத்தில் இரு நடுவர்களின் முடிவால் எங்களுக்கு தான் பாதிப்பு.
இவ்வாறு டோனி கூறினார்.
Post a Comment