News Update :
Home » » டெக்னிக்கல் புலி திரை விமர்சனம்

டெக்னிக்கல் புலி திரை விமர்சனம்

Penulis : karthik on Sunday 26 February 2012 | 23:53

 

ஹாலிவுட் 3டி படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக முழுக்க முழுக்க கோலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களால், காட்சிக்கு காட்சி மிரளவைக்கும் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி தரமானதாக வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் "அம்புலி 3 டி".


ஒரு கல்லூரி காதல் ஜோடி, கல்லூரியின் கோடை விடுமுறையிலும் காதலை வளர்க்க விரும்புகிறது. அதற்காக கல்லூரி விடுதியில், விடுமுறையிலும் தங்குகிறார் ஹீரோ. அவருக்கு உதவுகிறார் அவரது வகுப்பு மாணவனும், அந்த கல்லூரி வாட்ச்மேனின் வாரிசுமான மற்றொரு ஹீரோ. இரவில் நண்பனுக்கும் தெரியாமல் கல்லூரியை அடுத்த கிராமத்தில் இருக்கும் கதாநாயகியைத் தேடி காதலை வளர்க்க, திகில் அடர்ந்த சோளக்காட்டின் வழியாக போகிறார் ஹீரோ! ஹீரோவை மனித உயிர்களை குடிக்கும் அம்புலி துரத்துகிறது. அம்புலியிடமிருந்து தப்பி பிழைக்கும் ஹீரோ, அதன்பின் வரும் இரவுகளில் நண்பனுடன் சேர்ந்து கொண்டு அம்புலி பேயா...? பிசாசா..? மனித மிருகமா...? விநோத மிருகமா...? என்பதை கண்டுபிடிக்க களம் இறங்குவதுடன், காதலையும் வளர்ப்பதும், உயிருக்கு பயந்து வாழும் கதாநாயகியின் ஊரை காப்பாற்றுவதும் தான் அம்புலி படத்தின் அட்டகாசமான மீதிக்கதை!



அஜெய்-சனம், ஸ்ரீஜித்-ஜோதிஷா காதல் காட்சிகள் நச்! கல்லூரி விடுதி காவலாளி தம்பி ராமய்யாவின் எச்சரிக்கையையும் மீறி ஹீரோ ‌அஜெய், அந்த சோளக்காட்டை சைக்களில் கடந்து போவதில் ஆரம்பமாகும் திகில், படம் முழுக்க பரவிக்கிடப்பது அம்புலி படத்தின் பெரிய பலம்! மொட்டை ராஜேந்திரன் குடித்துவிட்டு போதையில் ஊரைச் சுற்றிக்கொண்டு கிராமத்திற்கு போக விரும்பாமல், தன் பெண் குழந்தையை அம்புலியிடம் பலி கொடுத்துவிட்டு அலறியடித்து ஓடுவதிலாகட்டும், இடையில் காட்டுவாசி போல் பார்த்திபனைக் காட்டி அம்புலி அவர்தானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை கூட்டுவதிலாகட்டும் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஹரிசங்கர் - ஹரீஷ் நாராயணன் இருவரும்!


மனித மிருகமாக அம்புலி உருவான விதத்தை ப்ளாஷ்பேக்கில் சொன்ன விதத்திலாகட்டும், அம்புலியின் அண்ணன் பார்த்திபன், கல்லூரி முதல்வரை கொன்றதற்கான காரணத்தை விளக்கியதிலாகட்டும், அதேகாட்டில் தன்னை கொல்ல வேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழும் பார்த்திபனை, சகோதர பாசத்துடன் அம்புலி விட்டு வைத்திருப்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதிலாகட்டும், இப்படி ஒவ்வொரு காட்சியையும் கவனமாக கையாண்டிருக்கின்ற இரட்டை இயக்குநர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! செங்கோடனாக பார்த்திபனும், அம்புலியாக கோகுலும் வாழ்ந்தே இருக்கிறார்கள் பலே! பலே!!


திகில் படத்திற்கு ஏற்ற மிரட்டல் பின்னணி இசையை தந்திருக்கும் வெங்கட்பிரபு சங்கர், சாம்ஸ், சதிஷ், மெர்வின் சாலமன் நால்வர் கூட்டணியும், சதிஷ், ஜியின் பயமுறுத்தும் இருட்டிலும் பளீரிடும் ஒளிப்பதிவும் பிரமாதம்! ரெமியனின் கலை இயக்கமும் பிரமாண்டம், பிரமாதம்!!


கண் எதிரே படமெடுத்தாடும் பாம்பு, முகத்திற்கும் மூக்கிற்கும் அருகில் நீளும் இரட்டைக்குழல் துப்பாக்கி. நம்மையும் காட்டிற்குள் அழைத்துப்போகும் 3டி எஃபெக்ட் சோளக்காடு, நம்மீது பறந்து வந்து விழும் பாவனையை ஏற்படுத்தும் இலை, தழைகள், பாய்ந்து வந்து தாக்கும் பயத்தை ஏற்படுத்தும் ராட்சஸ அம்புலி இத்யாதி இத்யாதி, 3டி தொழில் நுட்பங்களுக்காகவே லாஜிக்கை மறந்து இந்த மேஜிக் படத்தை கண்டு களிக்கலாம்!


ஆக மொத்தத்தில் "அம்புலி", தமிழ் சினிமாவின் "டெக்னிக்கல் புலி" என்றால் மிகையல்ல!!
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger