News Update :
Home » » பெண் குறி - ஆபாசம் - அந்தரங்கம் - பெண் விடுதலையின் புது வடிவம்!

பெண் குறி - ஆபாசம் - அந்தரங்கம் - பெண் விடுதலையின் புது வடிவம்!

Penulis : karthik on Tuesday 24 January 2012 | 02:44


சர்ச்சையினை கிளப்பும் விவாத மேடை: 
அன்பிற்குரிய சொந்தங்களே, எல்லோரும் நலமா? இலக்கியம் எனப்படுவது காலத்தின் கண்ணாடி என்று கூறுவார்கள். நாம் வாழும் காலத்தினைப் பிரதிபலிப்பது தான் இலக்கியமாகும் எனும் வகையறாவினைத் தழுவியும், வரலாறுகளைத் தழுவியும் பல படைப்பிலக்கியங்கள் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றன.பெண்ணியம், தலித்தியம், நட்டார் வழக்கு இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், பின் நவீனத்துவப் படைப்புக்கள் எனப் பல வகையான இலக்கிய வடிவங்கள் இன்றளவில் எம்மிடையே புழக்கத்தில் உள்ளன. ஆனால் பெண் விடுதலை பற்றிய படைப்புக்கள் மாத்திரம் ஓர் வித்தியாசமான திசையினை நோக்கிப் பயணிக்கின்றன. 
அடுக்களையில் உணவு சமைப்பதற்கும்,ஆண் விரும்பிய போது படுக்கையைப் பகிர்வதற்கும் தான் பெண் லாயக்கு எனும் நிலையினை மாற்றும் வகையிலும், பெண்களின் புரட்சி வேண்டியும் பாரதி கவிதை பாடினான். அவன் விடுதலைத் தீயினைத் தன் கவிதையில் மூட்டியிருந்தான். ஆனால் இன்றளவில் பெண்கள் விடுதலை எந் நிலையில் இருக்கிறது என்பதனை நாம் உற்று நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த கவிதைகளும், ஆணாதிக்க வெறிக்கு எதிரான கவிதைகளும் சுதந்திரப் பெண் எழுத்தாளர்களின் சுயாதீன அல்லது சுதந்திர ஊடக கருத்துப் பரிமாற்றத்தின் ஓர் வடிவம் என்று நாம் கூறலாமே அன்றி, இவை பெண் விடுதலையின் இன்னோர் வடிவம் என ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆண்கள் மட்டும் தான் பெண்ணழகை வர்ணிக்கும் நிலை இருந்த காலத்திற்கு முரணாக "சில சமயம் விளையாட்டாக உன் ஆடைக்குள் நான் வேண்டும்" எனக் கவிதை பாடிய கவிதாயினிகளும், ஆண்டாள், மற்றும் காரைக்கால் அம்மையாரும் சுதந்திரப் பெண் எழுத்தாளர்களுக்கான அடையாளங்களாக நம் முன்னே தெரிகின்றார்கள். இவர்களைப் போன்று பல கவிதாயினிகள் சுதந்திரப் பெண் எழுத்தாளர்களாக எம் முன்னே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எழுத்துகளினூடாக இன்று பெண் விடுதலை என்ப்படுவது செயல் வடிவம் பெற்றுள்ளது எனும் கருத்துக்களை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான கூற்றுக்களை இலக்கிய ஆய்வாளர்கள் நிராகரிக்கும் அதே வேளை, பெண்ணியம் என்ற வட்டத்தினூடாக பெண் விடுதலை எனும் வகையில் புனையப்படும் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய கவிதைகள் பெண் விடுதலைக்கான கவிதைகள் அல்லது இன்னோர் வடிவங்களே அல்ல எனவும் கூறுகின்றார்கள்.

பெண் விடுதலை என்றால் என்ன? 
பெண் விடுதலை என்றால் என்ன? ஆண் குறி மையப் புனைவிற்கு எதிராக எழுதுவதும், பெண்கள் சுதந்திரப் பறவைகள் என எம் தமிழ் எழுத்துலகம் உணர்ந்து கொண்ட பின்னர், "விரிந்திருக்கும் என் யோனி மடலை நாவால் வருட நீ வாராய் கண்ணா" எனக் கவிதை பாடி விட்டு, இது தான் பெண் விடுதலை என்று அர்த்தம் கற்பிப்பதும் தான் பெண் விடுதலையா? அல்லது எம் பெண் எழுத்தாளர்களால் கற்பிக்கப்படும் பெண் விடுதலை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் பக்குவ நிலையில் இருக்கிறோமா? பெண்களுக்கெதிரான வன்முறைகள், ஆணாதிக்கம் முதலியவற்றுக்கு எதிரான பெண்களின் குரல் எம் சமூகத்தில் இன்னும் பலமாக ஒலிக்கவில்லை எனலாம்.  காரணம் பெண் விடுதலை, பெண்ணியம் என்ற பெயரில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிப் பேசும் படைப்புக்களை விட, பெண் குறி, ஆண் குறி, யோனி மடல் பற்றிய கவிதைகளே இணையத்தில் பெண்ணிய வாதிகள் எனத் தம்மைத் தாமே சுட்டுவோரால் எழுதப்படுகின்றன
பெண் குறி, ஆண் குறி, யோனித் துவாரங்கள் பற்றிப் பாடி விட்டு இவை தான் இன்றைய பெண் விடுதலையின் குரல் எனச் சொல்லும் இலக்கியவாதிகளின் கூற்றுக்கள் ஆரோக்கியமான பெண் விடுதலை இலக்கியத்திற்கு நல் வழிகாட்டியாக இருக்குமா?"வன் புணர்விற்கு ஏதுவாய் யோனியின் உதடுகளை அரிந்து போட்டு, கருங் குழியென செதுக்கி வைத்திருக்க சொல்லித் தந்திருக்கிறார்கள்" (நன்றி லீனா மணி மேகலை) இவ்வாறு பெண்கள் தம் மனதில் படும் விடயங்களைச் சுதந்திர எழுத்தாளர்களாக 21ம் நூற்றாண்டில் எழுதுவது வரவேற்கத்தக்க விடயம். வாழ்த்துக்கள் கூறி, நாம் சல்யூட் அடிக்கின்றோம்.சுதந்திரப் பறவைகளாக தம் உள்ளத்தினுள் ஊற்றெடுக்கும் விடயங்களைப் பெண்கள் கூறுவதில் தவறேதும் இல்லை. ஆனால்,  பெண் குறி, ஆண் குறி, யோனி மடல், சிற்றின்ப விளையாட்டு இவை தான் பெண் விடுதலை அல்லது நவீன பெண் விடுதலை இலக்கியங்கள் என்று கூறும் கருத்தினை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? 

நவீன பெண் விடுதலை இலக்கியங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? பெண் விடுதலை, பெண்ணியம் என்படுவது வெறுமனே ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களைப் பாடுவதனூடாகவா வெளிப்படுகின்றது? இன்றைய காலத்தில் பெண் விடுதலையினை நோக்கிய வகையில் பெண் எழுத்தாளர்கள்,பெண்ணியவாதிகளின் படைப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும்? பெண் விடுதலை தொடர்பான படைப்புக்களின் எழுச்சி என்பது தமிழ் இலக்கிய உலகில் எந் நிலையில் இருக்கிறது? சுதந்திரப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் அந்தரங்க உறுப்புக்களை மையப்படுத்தி கவிதை புனைவதனூடாக வளர்ச்சியடைந்திருந்தாலும், பெண் விடுதலை என்ற நிலையில் நோக்கும் போது,பெண்களின் பரிபூரண சுதந்திரம் இவர்களின் படைப்புக்களினூடாக ஏன் வெளிப்படுத்தப்படவில்லை? இந்தக் கருத்துக்களுக்கான பதில்களை உங்களிடம் எதிர்பார்த்து விவாத மேடையானது உங்களை நோக்கி விரிந்திருக்கிறது. உங்கள் காத்திரமான கருத்துக்களோடு நீங்களும் விவாத மேடையில் களமிறங்கலாம் அல்லவா?
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger