News Update :
Home » » என்னை கெடுத்த பொண்ணுங்கள் - சூடான & சுவையான தொகுப்பு

என்னை கெடுத்த பொண்ணுங்கள் - சூடான & சுவையான தொகுப்பு

Penulis : karthik on Tuesday 24 January 2012 | 02:36


மனம் ஓர் குரங்கு என்று சொல்லுவார்கள். எல்லா மனிதருள்ளும் காதல், அன்பு, பாசம் என்கின்ற பல்வேறுபட்ட உணர்வுகள் பொதிந்து கிடக்கும். அவை ஓர் அலாரம் போன்று தமக்குரிய நேர காலம் வரும் போது தம் குண இயல்பினை வெளிப்படுத்தக் கூடியவை.பூமியில் பிறந்த மனிதனுக்கு என்றோ ஓர் நாள் காதல் என்ற ஓர் தெய்வீக உணர்வு நிச்சயமாக வந்திருக்கும். இரு தலையாக காதல் வரா விட்டாலும், ஒரு தலையாக நிச்சயமாக காதல் உணர்வுகள் அவன் மனதினைக் கட்டிப் போட்டிருக்கும் எனலாம். ஆசாபாசங்கள் என்பப்படுவது ஒரு திரி தூண்டி போன்று தூண்டி விட்டால் பற்றி எரியக் கூடிய வல்லமை பெற்றவை. யாருக்கு எப்போது, எந்த இடத்தில் தம் வெப்பியாரத்தினைக் காட்டுகின்ற திறன் கொண்டவை இந்த உணர்ச்சிகள் என்று இலகுவில் எல்லோராலும் அளக்கவோ, அறியவோ முடிவதில்லை.
இந்தப் பதிவு முற்று முழுதாக என்னைப் பற்றிய பதிவு.முழுக்க சுய புலம்பலாகவும்,என் அனுபவங்களின் வெளிப்பாடுகளாகவும்,என் உணர்ச்சிகளின் உந்துதலாகவும் அமைந்து கொள்ளும். ஆர்வமுள்ள அன்பு உள்ளங்கள் இப் பதிவினைத் தொடர்ந்து படிக்கலாம். வலைப் பதிவிற்கு வரும் வாசகர்களின் ரசனைக்கு ஏற்றாற் போல இத் தொடரையும் எழுத வேண்டும் எனும் ஆவலுடன் அடியெடுத்து வைக்கின்றேன். தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் புலம்பலாகவும், மிஞ்சும் கெஞ்சலாகவும், உங்கள் மன உணர்வைத் தூண்டும் காதல் துள்ளலாகவும் இப் பதிவுத் தொடர் அமையலாம். "முன்னே இருந்து நந்தி போல நீண்ட அறிமுகம் சொல்லி, நிரூபா உன் கண்ணை காயம் செய்த கன்னியரைப் பார்க்க வந்திருக்கும் எம்மை நீ அதிகம் பேசி அலுப்படிக்க வைக்கலாமா?"என நீங்கள் சொல்லுவதைச் செவிமடுத்தவனாய் பதிவிற்குள் நுழைகின்றேன். 

என் வாழ்வில் பல பெண்கள் வந்து போயுள்ளார்கள். ஒரு காலத்தில் இயற்கை கொடுத்த அழகும், என் ஆசிரியப் பெருந்தகைகள் எனக்குள் ஊட்டிய கல்வியும் பல பெண்களின் பார்வையினை என் மீது படரச் செய்தது எனலாம். கற்பனையெனும் சாற்றை ஊற்றி இப் பதிவிற்கு ஒப்பனை அலங்காரம் கொடுத்து சுவையான பதிவினைப் பொய்ப்பிக்க விரும்பவில்லை. பெண்களால் அதிகமாக அர்சிக்கப்படும் இயல்பு கொண்டவனாகவும், பெண்களை அதிகம் ரசித்து பின் தொடர்ந்து என்னை பின் தொடர வைக்கும் பண்பு கொண்டவனாகவும் நான் ஓர் காலத்தில் வாழ்ந்திருக்கிறேன் என்று சொன்னால் யாரும் நம்பவா போறீங்க? சரி! ஓவரா பில்டப்பு கொடுத்து வெறுபேத்துறானே இந்தப் பாவிப் பய என்று நீங்க திட்ட முன்னாடி நேரடியாகவே விடயத்திற்குள் வருகிறேன்.

நாங்கள் அப்போது ஈழத்தின் வன்னி மாவட்டத்தின் நட்டாங்கண்டல் பகுதியில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி என் அத்தையின் வீடு (அப்பாவின் அக்கா) அமைந்திருந்தது. அங்கே என்னை விட வயசில் இரண்டு குறைவான இரணைப் பொண்ணுங்க (இரட்டைப் பொண்ணுங்க) எனக்காகப் பிறந்தது போல பிறந்திருந்தாங்க. நான் நடை பயிலத் தொடங்கும் காலத்தில் அந்த இரணைகளும், நடை பயிலத் தொடங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் மண் விளையாடி மகிழ, மரப்பாச்சி பொம்மை செஞ்சு விளையாட அவளுங்களுக்கு ஏத்த சோடிங்க நானும் என் தம்பியும் தான். எனக்கும் என் தம்பிக்கும் இரண்டு வயது வித்தியாசம் இருக்கும். எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது என் மச்சாளுங்களான நித்தியா, வித்தியா இருவருக்கும் மூனு வயசிருந்திச்சு. 
நித்யா, கூட இயல்பாகவே அழையா விருந்தாளியாக நான் போய் அந்தச் சின்ன வயசிலையே ஒட்டிக்குவேனாம். அதே போல வித்தியா கூட என் தம்பி போயி ஒட்டிக்குவான். இரண்டு பேரும் கை கோர்த்து ஜாலியாக ஓடியாடி விளையாடுவதை, நேசரிக்குப் போய் வருவதனைப் பார்த்த நம்ம மாமா ஒருத்தர் எங்களை நையாண்டி செய்து அப்போது ஓர் பாடலைப் பாடுவார். அந்தப் பாடல் இலங்கையின் பொப் இசை வரலாற்றில் மிகவும் பிரபலமான "சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே! பள்ளிக்குத் தான் சென்றாளோ! படிக்கத் தான் சென்றாளோ! எனும் பாடலாகும். இந்தப் பாடலை மாமா பாடும் போது எனக்கு வெட்கம் வெக்கமா வருமுங்க. ஓடிப் போயி அம்மாவின் சட்டைக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்குவேனுங்க.

இப்படி மச்சாள்காரிங்க கூட ஜாலியாக பால்ய வயதினைக் கழிச்சுக் கொண்டிருந்த எனக்கு இடியாக அமைந்தது என் அப்பாவின் வேலை மாற்றம். இதன் காரணமாக முதலாம் ஆண்டு கல்வியினை நாம் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து சென்று தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இதனால் மீண்டும் வித்யா & நித்யா கூட விளையாட மாட்டேனா என்று ஏங்கிக் கொண்டிருந்தேனுங்க. அப்போது தான் எனக்குப் பக்கத்தில் ஒரு பூக் கட்டுக் கட்டிய ஆளு வந்து அமர்ந்திருந்தா. என் ஐஞ்சாம் கிளாஸ் வரைக்கும் அவங்க என் கூடவே வருவா என்று நான் நெனைச்சும் கூட பார்க்கலைங்க. அவங்க யாரென்று அறிய ஆவலா? அடுத்த பாகம் வரைக்கும் காத்திருங்கள்! 

நண்பர்களே, வாசகர்களே!
இப் பதிவு ஓவர் மொக்கையா இருக்கா? இல்லை சுய புகழ்ச்சி போல இருக்கா? அல்லது நீங்கள் ரசிக்கும் படி இருக்கிறதா? இத் தொடரினை நான் தொடரவா அல்லது வேணாமா? என்பது பற்றிய உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger