இன்று கிடைத்திருக்கிற தோல்வி, எங்களுக்கு அல்ல. உங்களுக்குத் தான். நீங்கள் வரவழைத்துக் கொண்ட தோல்வி. பஸ்சில் ஏறும் போதும், கடையில் பொருட்கள் வாங்கும் போதும், தோல்வியின் கனம் உங்களுக்குத் தெரியும். எனவே, தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: நாம் ஆட்சியை இழந்தாலும், மக்கள் நம் பக்கம் தான் இருக்கின்றனர். அவர்கள் என்னை மட்டுமல்ல, என் தலைமையிலான கழகத்தையும் கைவிட மாட்டார்கள். தமிழ் மொழிக்காக உயிர் நீத்தவர்களுக்கு, வீர வணக்கம் செலுத்த இக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தி ஆதிக்கம் வேண்டாம் என்பது, தி.மு.க.,வின் கொள்கை மட்டும் என்று சொல்ல மாட்டேன். இதே கோரிக்கைக்காக, யார் போராடினாலும் கைகோர்த்து நிற்போம். மொழிப் போருக்காக கட்சி வேறுபாடின்றி, ஒட்டுமொத்த தமிழகமும் கொதிக்குமானால், தி.மு.க.,வும் உறுதுணையாக இருக்கும்.
எல்லா மாநில மொழிகளையும், ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழ் மொழிக்கு வேறு மொழி ஈடில்லை. எனவே, தமிழ் மொழியை முதன் மொழியாக, ஆட்சியில் உட்கார வைக்க வேண்டும். நான், 14 வயதில் ஆரம்பித்த போராட்டம், இன்னமும் முடிந்துவிடவில்லை. இந்தியை கட்டாய மொழியாக கொண்டு வந்த ராஜாஜி தான், பெரியார், அண்ணா முழக்கத்தைக் கேட்ட பிறகு, இந்தி தமிழகத்திற்கு ஆகாது என, இந்திக்கு எதிராக மாறினார். திராவிடன் என்ற சொல், பெரியார், அண்ணா ஆகியோர் திணித்த சொல் எனக் கூறுவர். இந்திய தேசியகீதத்தை கேட்டுப் பார்க்கட்டும். அதில் வரும் திராவிடம் எங்கிருந்து வந்தது. அதை ஏற்றுக்கொண்டு மரியாதை செய்பவர்கள், திராவிட என்ற சொல் இல்லை என, ஏன் சொல்கின்றனர். இதை சொல்பவர்கள் பைத்தியமா? அல்லது அதை கேட்பவர்கள் பைத்தியமா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.
திராவிடம் என்பது கலாசாரம், இனம், இனத்தின் பண்பாடுகள். ஆரியருக்கு முன்பே இந்தியாவில் வாழ்ந்தவர்கள். பள்ளி வரலாற்று புத்தகங்களிலும், இச்செய்தி உள்ளது. திராவிட இயக்கம், தி.மு.க., என்று அழைப்பது, பெரியார், அண்ணா கண்டுபிடித்த வார்த்தை அல்ல. நம் முப்பாட்டன் வாழ்ந்த இனத்தைக் குறிக்கும் பெயர். நாம் அதை மறந்து விடக் கூடாது. திராவிடர் எனக் கூறி திராவிடர்களை ஏமாற்றுபவர்களிடம், தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன் இல்லாத எழுச்சி, தற்போது எப்படி வந்தது? அடிபட்டால் தான் தெரியும் என, நீங்கள் சொல்லாமல் சொல்வது எனக்குப் புரிகிறது. இன்று கிடைத்திருக்கிற தோல்வி, எங்களுக்கு அல்ல. உங்களுக்குத் தான். நீங்கள் வரவழைத்துக் கொண்ட தோல்வி. பஸ்சில் ஏறும் போதும், கடையில் பொருட்கள் வாங்கும் போதும், தோல்வியின் கனம் உங்களுக்குத் தெரியும். எனவே, தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள். தவறு செய்துவிட்டதை உணர்பவர்கள், வாழ்க்கையில் தவறே செய்ய மாட்டார்கள். அந்தப் பாடத்தை கற்றுக் கொண்ட நீங்கள், எதிர்காலத்தில் இப்போது செய்த தவறை மனதில் வைத்து, உங்களையும் காப்பாற்றுவதோடு, தமிழர்களை திராவிடர்களாக, பகுத்தறிவாதிகளாக, உடன்பிறப்புகளாக வளர்த்தெடுக்க வேண்டும். அழைத்தாலும், அடித்தாலும், காஞ்சி மக்களை மறக்க மாட்டேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
Post a Comment