கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க., பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், ஓசூர் தாயப்பா தோட்டத்தில் நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: கடந்த 1996ம் ஆண்டு, பா.ம.க., சரியான நோக்கத்துக்காக இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. அதன் பின், அதிக எம்.எல்.ஏ., "சீட்'களுக்கு ஆசைப்பட்டு, திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்தோம். அதனால், மக்கள் இரண்டு தேர்தல்களில், பா.ம.க., வுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர். 15 ஆண்டுக்கு முன் தனித்துப் போட்டியிட்டபோது, நான்கு எம்.எல்.ஏ., "சீட்' பிடித்தோம். கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, மூன்று எம்.எல்.ஏ., "சீட்'களைத் தான் பிடித்துள்ளோம். அ.தி.மு.க.,வுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து, ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கூட்டணி அமைத்து, நாம் பெற்ற பயன் இது தான். அதனால், பா.ம.க.,வை மக்கள் கேலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பா.ம.க.,வை தோற்கடிக்க, தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், எழுதப்படாத மறைமுக கூட்டணி அமைக்கின்றனர். அவர்கள், பா.ம.க., தயவால் வெற்றி பெறுகின்றனர். அதனால், வரும் தேர்தல்களில் கூட்டணியை நம்பாமல் மக்களைநம்புவோம். பா.ம.க.,வை விட உயர்ந்த கொள்கை, கோட்பாடு உள்ள கட்சிகள் எதுவும் இல்லை. திராவிட கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டனர். தேர்தல் செலவு என்பது, ஊழல் புரிவதற்கான ஒரு முதலீடு தான். அதனால், தேர்தலில் ஓட்டு போடவும், தேர்தல் செலவுக்கு பணம் கேட்போரின் கன்னத்தில் பளார் அடி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்றுவதே, பா.ம.க., வின் முதல் வேலை. இவ்வாறு ராமதாஸ் பேசினார். இந்த பேச்சு, பா.ம.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Post a Comment