News Update :
Home » » வரும் முன் காத்துக் கொள்ளுங்கள்!

வரும் முன் காத்துக் கொள்ளுங்கள்!

Penulis : karthik on Tuesday, 27 December 2011 | 22:30

பிரச்னை என வந்துவிட்டால், சம்பந்தப்பட்ட இருசாராரும் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கு தீர்வு காண்பது தான் சாலச் சிறந்தது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், இதுவரை கேரள அரசும், தமிழக அரசும் பிடிவாத நிலையில் தான் இருந்து வருகின்றன.
இடையில், அரசியல்வாதிகள் புகுந்து, கேரள - தமிழக மக்களை பெரும் இன்னலுக்குள்ளாக்கி துயரப்படுத்தி வருகின்றனர். இது பெரும் வேதனைக்குரிய விஷயம். தற்போது, கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேச்சு வார்த்தைக்கு இணங்கி வந்திருக்கிறார். மேலும், இதன் மூலம், ஐந்து நிமிடங்களில் பிரச்னைக்கு சுமுகமான தீர்வும் கண்டுவிடலாம் என கூறியிருப்பது மனதிற்கு சற்று ஆறுதலான விஷயமாகும். அதே சமயம், பேச்சுவார்த்தைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இணங்க மறுப்பது, வேதனைக்குரிய விஷயம். புது அணை கட்டுவதும், தற்போதுள்ள அணையை இடிப்பது என்பதும் சாதாரண விஷயமல்ல. புது அணை கட்டுவதற்கு பல காலமாகும். கட்டிமுடித்த பின் தான், பழைய அணையின் நீரை அங்கு கொண்டு செல்ல முடியும். இது புரிந்தோ, புரியாமலோ, இரு மாநில அரசியல்வாதிகள் நடத்தி வரும் சுயநல போராட்டங்கள், கேரள - தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், ஒற்றுமையையும் சீர்குலைத்து விடும்.
பல கட்சிகளைச் சார்ந்த கேரள - தமிழக அரசியல்வாதிகளே... மக்கள் நலனில் மட்டும் அக்கறை கொண்டு, தயவு செய்து பிரச்னையை பூதாகரமாக வளர்த்துவிடாமல், அமைதி காக்க முன்வாருங்கள் என, இருகரம் கூப்பி மனம் உருகி வேண்டுகிறேன். கேரள - தமிழக மக்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு வீண் போராட்டங்கள், சண்டை, சச்சரவுகளை கைவிடுங்கள். வந்தபின் வாடி நிற்பதை விட, வரும் முன் காத்துக் கொள்ளுங்கள்!

பாடம் புகட்ட வேண்டும்!

என்.ராமானுஜம், திருக்குறுங்குடி, திருநெல்வேலியிலிருந்து எழுதுகிறார்: சிதம்பரம் அரசியலுக்கு வந்தபோது, "நல்ல ஒரு அரசியல்வாதியாக மிளிர்வார்' என, என்போன்ற மக்கள் பலரும் நம்பியிருந்தனர். ஆனால், காலம் செல்லச் செல்ல, தன் போக்கை மாற்றி, தன் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தன் மாநிலத்தையோ, தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களையோ கண்டுகொள்ளாமல் விட்டவர் தான் சிதம்பரம். தன் கட்சியை சார்ந்த எவருக்கும் பதவியைக் கொடுக்காமல், தான் மட்டுமே அனுபவிக்க விருப்பமுடையவர். மூப்பனார் தலைமையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவக்கிய போது, தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டார். பதவி கிடைக்காமல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தத்தளித்துக் கொண்டிருந்த போது, தனியாக காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற கட்சி அமைப்பை துவக்கி, நரசிம்மராவ் ஆட்சியில் அமைச்சர் பொறுப்பை கைப்பற்றியவர் தான் இவர். "கேரள அரசியல்வாதிகள், இடைத்தேர்தல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் செயல்படுகின்றனர்' என்று தெரிவித்த இவர், தன் கட்சியிலேயே பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தவுடன், "மன்னிப்பு' கேட்டுக்கொண்டு, தன்னுடைய சுய ரூபத்தை, அரசியல் பச்சோந்தித்தனத்தை வெளியிட்டுள்ளார். தமிழக மக்கள், இவருக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பது தான், என்போன்ற வயதானவர்களின் எதிர்பார்ப்பு.

விட்ட இடத்தை பிடித்துவிடக் கூடாது!

வீ.சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில் சனிப் பெயர்ச்சி நடந்தது. திருநள்ளாரில் சனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்கள் வணங்கிச் சென்றனர்.
அதுபோல, சென்னை போயஸ் தோட்டத்தில், மற்றொரு சனிப்பெயர்ச்சி ஏற்பட்டு, முதல்வர் ஜெயலலிதா வீட்டிலிருந்து, அவரது தோழி சசிகலா மற்றும் 13 பேர், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த துணிச்சலான செயலால், ஜெ.,க்கும், கட்சிக்கும், ஏன் தமிழக மக்களுக்கும், இனி நல்ல காலம் பிறந்திருக்கிறது என்றே சொல்லலாம். சனியின் பிடியிலிருந்து விடுபட்டது போல இருக்கிறது. இரண்டரை வருடத்துக்கு இடம் மாறும் சனி போல, மீண்டும் சசிகலா குரூப், விட்ட இடத்தைப் பிடிக்காமல் இருந்தால் சரி.

தமிழக வளர்ச்சிக்கு உதவட்டும்!

ஆர். வைத்தியநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "நிறைவேறாது! இனி மன்னார்குடி கும்பலின் ஆதிக்கம்; ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை, சசிகலா குடும்பம் விரட்டியடிப்பு, ஆட்சி, கட்சியில் போட்ட ஆட்டம், குளோஸ்!' என்ற தலைப்பில், "தினமலர்' நாளிதழ் வெளியிட்ட செய்தி சிறப்பானது. மேலும், சசிகலாவின் ஆட்டம் குறித்து, விவரமாகச் செய்தி வெளியிட்டு, தமிழக மக்கள் மனதில், நீங்கா இடம் பிடித்து விட்டது, "தினமலர்!'
அதிரடிக்கு பெயர் பெற்ற, முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை, தமிழகம் முழுவதும், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. என் நண்பர்கள் பலர், என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தனர். இனி, தமிழக முன்னேற்றத்தை விரும்பும் அறிஞர்களின் துணையோடு, ஜெயலலிதா ஆட்சி புரிந்து, தமிழக மக்களின் இதயத்தில், நீங்கா இடம் பெற வேண்டும். அவரது பெயர், தமிழக வளர்ச்சிப் பாதைக்கு உதவியது என்ற பெருமையை பெற வேண்டும். அறிஞர்கள் பலரும், அவரைத் தொடர்பு கொண்டு, கருத்து பரிமாற்றம் செய்து, தமிழக வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும்.

விழித்துக் கொள்ள வேண்டும் ஜெயலலிதா

ஜே.இ.ராஜகுமார், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., அதலபாதாளத்திற்கு செல்லக் காரணம், அவர்களுடைய குடும்ப ஆட்சி தான். அதைப் போன்று தான், சசிகலா குடும்பத்தினர், அ.தி.மு.க.,வில் ஆட்டம் போட்டனர். நல்லவேளை, ஜெயலலிதா விழித்துக்கொண்டதால், அவரும் தப்பினார்; அ.தி.மு.க.,வும் தப்பித்தது. இனியாவது, ஜெ., எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசிகளை அடையாளம் கண்டு, அவர்களை உற்சாகப்படுத்தி, இன்னும் கட்சியை வலுப்படுத்த வேண்டும்!
அரசியலில் ஒரு சுலோகம் உண்டு... அதாவது, "நிரந்தர நண்பனும் கிடையாது; நிரந்தர எதிரியும் கிடையாது' என்று! மீண்டும் மன்னார்குடி கும்பலில் சிக்காது, ஜெ., கவனமாக இருக்க வேண்டும். இனிமேல் தான், ஜெ., மிகவும் சாதுர்யமாகவும், தைரியமாகவும் கட்சியில் எடுக்க வேண்டிய களைகளை எடுத்து, தூய்மைப்படுத்தி, நல்ல ஆட்சியை மக்களுக்கு தர முற்பட வேண்டும்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger