மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்டில்முதல் இன்னிங்சில், இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 282 ரன்கள் எடுத்து 51 ரன்கள் பின்தங்கி உள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணியின் விக்கெட்கள் "சரசரவென விழுந்தன. நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டிராவிட்(68) ரன்களுக்கு ஹில்பெனாஸ் பந்தில் போல்டானார். பின்னால் களம் இறங்கிய இஷாந்த் சர்மா(11), கோஹ்லி(11), தோனி(6) ஆகியோர் ஹில் பெனாஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.
தமிழக வீரர் அஸ்வின்(31) சிறது நேரம் தாக்கு பிடித்து சிடில் பந்தில் அவுட்டானார்.
முதல் இன்னிங்சின் இறுதியில் இந்திய அணி 94.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 282 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் ஹில்பெனாஸ் 5 விக்கெட்களையும், சிடில் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
சூப்பர் ஜோடி
நேற்றைய இரண்டாம் ஆட்டத்தில், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சச்சின்-டிராவிட் 117 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 100 ரன்களுக்கு மேல் 20வது முறையாக எடுத்தனர்.
* சச்சின் (3,224), லட்சுமணுக்கு (2,279) அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவிட், 2 ஆயிரம் ரன்களை கடந்து (2,040) அசத்தினார்.
* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, அதன் சொந்த மண்ணில் சச்சின் (1,595), லட்சுமணுக்கு (1,081) அடுத்து, டிராவிட்டும் ஆயிரம் ரன்களை (1,040) கடந்தார்.
* மெல்போர்ன் மைதானத்தில் ஜாகிர் கான் தனது சிறந்த பவுலிங்கை (4/77) பதிவு செய்தார். தவிர, கும்ளே (111 விக்.,), ஹர்பஜன் (90), கபில் தேவ் (79), பிரசன்னா (57), பிஷன் சிங் பேடி (56), ஷிவ்லால் யாதவை (55) அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 50 விக்கெட் (16 டெஸ்ட்) வீழ்த்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
* மெல்போர்னில் பி.கே.சென்னுக்கு (1947-48) பிறகு, ஒரு இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் தோனி(4 கேட்ச்).
8,000 ரன்கள்
நேற்று சேவக் 20வது ரன்னை எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம், இந்த இலக்கை எட்டிய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். சர்வதேச அளவில் 23வது வீரரானார்.
எட்டாயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள்:
வீரர் போட்டி ரன் 100/50
சச்சின் 185 15,256 51/64
டிராவிட் 161 13,162 36/63
கவாஸ்கர் 125 10,122 34/45
லட்சுமண் 131 8626 17/55
சேவக் 93 8047 22/30
* மெல்போர்ன் மைதானத்தில் சேவக் 3 இன்னிங்சில் 273 ரன்கள் எடுத்தார். இங்கு இவரது சராசரி 91.
* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8 டெஸ்டில் விளையாடிய சேவக், இதுவரை 900 ரன்கள் (2 சதம், 4 அரைசதம்) எடுத்துள்ளார்.
சேவக்-பட்டின்சன் மோதல்
எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பது ஆஸ்திரேலியாவுக்கு வாடிக்கை. இது நேற்றும் அரங்கேறியது. ஆட்டத்தின் ஏழாவது ஓவரின் 4வது பந்தில் ஒரு ரன்னுக்காக ஓடிய போது சேவக்கின் தோள்பட்டை, பட்டின்சன் தனது முழங்கையால் சேவக்கின் தோள்பட்டை பகுதியில் இடித்தார். இதனால் ஆத்திரமடைந்த சேவக், கடுமையான வார்த்தைகளால், பேட்டை உயர்த்தி பட்டின்சனை நோக்கி ஏதோ கூறினார். இதற்கு பட்டின்சனும் பதிலடி கொடுக்க, வார்த்தை போர் ஆரம்பமானது. பின் . மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடிலும், பட்டின்சனுடன் இணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக, தென் ஆப்ரிக்க அம்பயர் எராஸ்மஸ், சேவக்கை அழைத்து சமாதானப்படுத்தினார்.
இரண்டாவது இடம்
இந்திய வீரர் டிராவிட் நேற்று 63வது அரைசதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில், அதிக முறை 50 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்த வீரர்கள் வரிசையில், இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதுவரை டிராவிட், 99 முறை இச்சாதனை படைத்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (98 முறை) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 115 முறை (51 சதம்+64 அரைசதம்) உள்ளார்.
மீண்டும் ஏமாற்றம்
சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை சச்சின் மீண்டும் ஒருமுறை தவறவிட்டார். இதுவரை 99 சதம் (51 டெஸ்ட் + 48 ஒருநாள்) அடித்துள்ள இவர், கடைசியாக கடந்த மார்ச் மாதம், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார். அதன்பின் 4 ஒருநாள், 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவரால், ஒருமுறை கூட சதம் அடிக்க முடியவில்லை. இதில் ஒருநாள் போட்டியில் இரண்டு (53, 85), டெஸ்டில் ஐந்து (56, 91, 76, 94, 73) முறை அரைசதம் கடந்து அவுட்டானார்.
கண்டம் தப்பிய இந்திய வீரர்கள்
நேற்றைய ஆட்டத்தில், இந்திய வீரர் டிராவிட் 65 ரன்கள் எடுத்திருந்த போது, பீட்டர் சிடில் பந்தில் போல்டானார். ஆனால், சிடிலின் பந்துவீச்சு குறித்து சந்தேகமடைந்த அம்பயர், மூன்றாவது அம்பயரிடம் கேட்டார். "ரீப்ளேயில், "நோ-பால் வீசியது தெரியவர, டிராவிட் கண்டம் தப்பினார்.
* துவக்க வீரர் சேவக், இரண்டு முறை தப்பினார். இவர், 54 ரன்கள் எடுத்திருந்த போது, நாதன் லியான் வீசிய பந்தை தூக்கி அடிக்க, அதனை டேவிட் வார்னர் கோட்டை விட்டார். இதேபோல, 58 ரன்கள் எடுத்திருந்த போது பட்டின்சன் வீசிய பந்தை அடிக்க, அதனை விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நழுவவிட்டார்.
அஷ்வின் நம்பிக்கை
அஷ்வின் கூறுகையில்,""முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பேட்டிங் ரசிக்கும் படியாக இருந்தது. சச்சின் எப்படியும் சதம் அடித்து விடுவார் என்று நினைத்தேன். ஆனால் கடைசி ஓவரில் அவுட்டானது ஏமாற்றமாக உள்ளது. லட்சுமண், டிராவிட் அனுபவ ஆட்டம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். இன்றும் சிறந்த முறையில் பேட் செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இரண்டாவது இன்னிங்சிலும் விக்கெட் வேட்டை தொடரும், என்றார்.
Post a Comment