கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாளான டிசம்பர் 22-ந்தேதி தேசிய கணித நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிவித்தார்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து கணிதத்தில் புரட்சி செய்ததன் மூலம் உலக அளவில் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்தவர் கணிதமேதை ராமானுஜம். அவரது 125-வது பிறந்தநாள் விழா நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபத்தில் மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கணிதமேதை ராமானுஜம் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். அதை கவர்னர் ரோசய்யா, மத்திய மந்திரிகள் கபில்சிபல், ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், இணைமந்திரி நாராயணசாமி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் முதலியோர் பெற்றுக்கொண்டனர்.
ராமானுஜம் கைப்பட எழுதிய கணித புத்தகம் 700 பக்கங்களைக் கொண்டது. அது இப்போது சென்னை பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது. அதில் இருந்து மைக்ரோ போட்டோ காப்பி எடுத்து அதை அச்சடித்து புத்தகங்களாக தயாரித்து அதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில் சிபல் வெளியிட்டார்.
அதன் முதல் பிரதியை பிரதமர் மன்மோகன்சிங் பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த பிரதிகளை ராமானுஜம் கமிட்டி துணைத்தலைவர் ரகுநாதன், சென்னைபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.திருவாசகம், அமெரிக்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கண்ணன் சவுந்தர்ராஜன், பேராசிரியர் பி.கே.தத்தா உள்பட பலருக்கு கொடுத்து கவுரவித்தனர்.
ராமானுஜம் வரலாற்றை புத்தகமாக வெளியிட்ட பேராசிரியர் ராபர்ட் கனிகலுக்கு கவர்னர் ரோசய்யா பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கினார். 2012-ம் ஆண்டை தேசிய கணித ஆண்டாக பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்து அதற்கான பலகையை திறந்துவைத்தார். மேலும் கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாளான டிசம்பர் 22-ந் தேதியை தேசிய கணிதநாளாக அறிவித்தார்.
அப்போது பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:-
ராமானுஜத்தை தலை சிறந்த கணித மேதைகளில் ஒருவராக இந்த உலகம் காண்கிறது. அவருடைய மூளைத்திறன், அறிவாற்றலை பாராட்டாதவர்களே இல்லை என்று கூறலாம். ராமானுஜம் போல ஆழ்ந்த அறிவுத்திறனில் பிறப்பவர்கள் உலகில் மிகவும் அரிது.
ராமானுஜத்தின் 125-வது ஆண்டு விழாவை ஆண்டு முழுவதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள மனித வளத்துறைக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். 2012 வருடம் தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்படுகிறது.
ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கிரேக்க நாட்டில் கணிதம் வளர்ந்து இருந்தது. இந்தியாவிலும் கணிதத்துறையில் பல வல்லுனர்கள் தோன்றி உள்ளனர்.
5-ம் நூற்றாண்டில் ஆரியப்பட்டாவும், அதற்கு பின்னர் பிரம்ம குப்தாவும் தலைச்சிறந்த கணிதமேதைகளாக விளங்கினார்கள். பூஜியத்தை ஒரு எண்ணாக பார்ப்பதற்கு இந்தியாதான் காரணமாக இருந்தது. இது கணிதத்துறையில் உலக அளவில் இந்தியா பாராட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
ஆரியப்பட்டா காலத்திற்கு பிறகு ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா கணிதத்தில் முன்னணியில் இருந்திருக்கிறது. கடைசியாக கேரளாவில் பிறந்த கணிதமேதை மாதவா காலத்தில் கணிதம் மேலும் வளர்ந்தது. அவர் கணித பள்ளியும் நடத்தினார்.
மேலை நாடுகளில் பிறந்த நியூட்டன், லைப்மிட் ஆகியோர் கணக்கீட்டு முறையை கண்டுபிடிக்கும் முன்பே மாதவா கணக்கீட்டு கூறுகளை கண்டுபிடித்தார்.
இந்த நிலையில் சர்.சி.வி.ராமன், கணிதமேதை ராமானுஜம், சுப்பிரமணியம் சந்திரசேகரன் ஆகியோர் கணிதத்துறையில் சிறந்து விளங்கியதால் உலக அளவில் புகழ் பெற்றனர். ராமானுஜம் மிகவும் ஏழ்மை நிலையில் பின்தங்கிய பொருளாதார சூழ்நிலையில் பிறந்தாலும் அவரின் அறிவாற்றலால் வளர்ந்து கொண்டே இருந்தார்.
ராமானுஜம் போன்ற திறமைசாலிகளை பல்கலைக்கழகங்கள் கண்டறிந்து அவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும். வருகிற ஆண்டு கணித ஆண்டாக கொண்டாடப்படுவதால் பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகள் கணிதத்துறையில் இப்போது இருப்பதை விட சிறந்த அறிவை பெறுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
விழாவில் மத்திய மந்திரி கபில்சிபல் பேசியதாவது:-
இந்தியாவில் மாணவ-மாணவிகள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகிறார்கள். வருடம் முழுவதும் பாடம் நடத்திவிட்டு வருட இறுதியில் தேர்வு வைத்து அப்போது எடுக்கப்படும் மார்க் அடிப்படையில் அந்த மாணவரின் கல்வித்திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.
ஐ.ஐ.டி. மற்றும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள். அனைத்து தரப்பு கல்விநிறுவனங்களில் படிப்பவர்களும் சிறந்துவிளங்கி உயர் பதவிக்கு வரவேண்டும். அந்த வகையில் கல்வி அமையவேண்டும்.
மனப்பாட முறை இப்போது 10-வது வகுப்புவரை மாற்றப்பட்டு கிரேடு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாறாக வருடம்முழுவதும் மாணவர்கள் வகுப்பில் நடந்துகொள்ளும் முறை, அவர்களின் தனித்திறன்கள், புத்தக அறிவு, புதிய உத்வேகம் அளிக்கும் திறமைகள் அனைத்தையும் ஏட்டில் குறித்து வருட இறுதியில் மாணவரின் திறன் மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
காலப்போக்கில் மனப்பாடம் செய்யும் முறை முற்றிலுமாக மாற்றப்படவேண்டும்.
இந்தியாவில் 18 வயது முதல் 24 வயது வரை உயர்கல்வி கற்போர் சதவீதம் 15 மட்டுமே. ஆனால் வளர்ந்த நாடுகளில் அது 50 சதவீதமாக உள்ளது. 15 சதவீதத்தை 30 சதவீதமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு மந்திரி கபில் சிபல் பேசினார்.
தேசிய ராமானுஜம் கமிட்டியின் துணைத்தலைவர் எம்.எஸ்.ரகுநாதன் பேசுகையில், "கணிதமேதை பற்றிய விழிப்புணர்வை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்களிலும் கருத்தரங்குகள் நடத்தி மாணவ-மாணவர்களிடம் கணிதத்தில் சிறந்த வல்லுனர்களாக வருவதற்கு வகை செய்யப்படுகிறது. இதற்காக சிறு மற்றும் பெரு நகரங்களில் ராமானுஜர் பற்றிய விழா எடுக்கப்படுகிறது. கணிதமேதை பற்றிய செய்திப்படம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் காண்பிக்கப்படும்" என்றார்.
Post a Comment