ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற படம் தயாராகி இருக்கிறது.
இந்த படத்தில், நடிகையாக சோனியா அகர்வால் நடித்து இருக்கிறார். ராஜ்கிருஷ்ணா டைரக்டு செய்துள்ளார். புன்னகைப்பூ கீதா தயாரித்து இருக்கிறார்.
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டு பேசினார்.
அவர் பேசுகையில், "எல்லோருடைய வாழ்க்கையையும் போல் நடிகையின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சோகம், இன்பம், துன்பம், ரகசியம் இருக்கும். குறிப்பாக, நடிகையின் வாழ்க்கையில் பல ரகசியங்கள் இருக்கும். வெளியே தெரியாத பக்கங்கள் இருக்கும். அந்த பக்கங்களை இந்த படத்தில் காட்டியிருப்பதாக சொன்னார்கள்.
நடிகையின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் இருக்கும். எனக்கும் அந்த ஆவல் நிறைய உண்டு. இந்தப் படம் எனக்கே பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இந்தப் படம் பெறவிருக்கும் வெற்றிக்கு அதுவே பெரிய உதாரணம்,'' என்றார்.
சோனியா அகர்வால் பேசும்போது, "நான் மூன்று வருடங்களாக நடிக்கவில்லை. மறுபடியும் நடிக்க வந்தபோது, ஒரு புதுமுகம் போல் உணர்ந்தேன். உடன் நடித்தவர்கள், இயக்குநர் போன்றவர்கள்தான் என்னை மிக இயல்பாக இருக்க உதவினர்,'' என்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்தப் படத்தில் உங்கள் வாழ்க்கையின் ரகசியங்களைச் சொல்லியிருக்கிறீர்களா?
எல்லோருடைய வாழ்க்கையிலும் ரகசியங்கள் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. என் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன.
நான் நடிகையாக இருப்பதால், என் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். என் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை. `ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தின் கதைக்கும், என் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. ஒரு சதவீதம் கூட, என் சொந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் சொல்லவில்லை.
டர்ட்டி பிக்சர் என்று இந்தியில் இதே மாதிரி படம் வருகிறது. மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படமும் துவங்கப் போகிறது. நடிகை பற்றி படங்கள் அதிகம் வருவது குறித்து...
'டர்ட்டி பிக்சர்' என்ற இந்தி படத்தின் கதை வேறு. நடிகையின் வாழ்க்கையை பற்றிய படங்கள் இதற்கு முன்பு நிறைய வந்துள்ளன. மதூர் பன்டார்கரின் 'ஹீரோயின்', 'திரைக்கதா' போன்ற படங்கள் வருவதெல்லாம் தற்செயலானது. நடிகை பற்றிய ரசிகர்களின் ஆவலைப் புரிந்து எடுக்கிறார்கள். அதேநேரம், அந்த படங்களில் இருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்.'
குணச்சித்திர வேடங்கள் வந்தால் நடிப்பீர்களா?
எனக்கு கதாநாயகியாக நடிக்க அதிக சந்தர்ப்பங்கள் வருகின்றன. அதனால், குணச்சித்திர வேடங்களில் நடிக்க மாட்டேன்.''
இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.
இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு, பட அதிபர் கே.ராஜன், ஒளிப்பதிவாளரும் பட அதிபருமான கேசவன், நடிகர் ராஜ்கபூர் ஆகியோரும் பேசினார்கள்.
பட அதிபர் புன்னகைப்பூ கீதா வரவேற்றுப் பேசினார். இயக்குநர் ராஜ்கிருஷ்ணா நன்றி கூறினார்.
Post a Comment