அஜீத் நடிப்பில் வெளிவந்த 50வது படம் ' மங்காத்தா' . அர்ஜுன், த்ரிஷா, லட்சுமிராய், பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம். வெங்கட்பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தயாநிதி அழகிரி தயாரிக்க, சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
அஜீத்தின் வித்தியாசமான நடிப்பால் இப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.
அஜீத்தைப் பொருத்தவரை அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. ' மங்காத்தா ' படத்தின் இசை வெளியீட்டு விழா கூட ஒரு எஃப்.எம் ஸ்டேஷனில் சிம்பிளாக நடைபெற்றது. பட வெளியீட்டிற்கு பிரச்னை எழுந்த போது கூட அஜீத் எந்த ஒரு அறிக்கையும் தரவில்லை.
படம் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த வேளையில் தயாரிப்பாளர் தயாநிதி 'மங்காத்தா' படத்தின் 100வது விழாவை கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்.
இது குறித்து தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் இணையத்தில் " அஜீத் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை. படத்தின் நாயகன் இல்லாமல் 'மங்காத்தா' படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.
அஜீத் சார் நடித்து வெளிவந்த படங்களில் ' மங்காத்தா ' படம் தான் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. அப்படத்தினை எனது நிறுவனம் தயாரித்ததில் பெருமை கொள்கிறேன்.
தல ரசிகர்கள் அவரை 'மங்காத்தா' படத்தின் 100வது நாள் விழாவிற்கு அழைத்து வருவதாக இருந்தால், 100வது நாள் விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய காத்திருக்கிறோம் " என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment