கணவரிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள் கண்டிப்பாக இருக்கத் தான் செய்யும். அதே போன்று தான் கணவன்மார்களுக்கும் மனைவியிம் பிடிக்காத விஷயங்கள் இருக்கும். தன் மனைவிக்கு இன்னன்ன விஷயங்கள் பிடிக்காது என்று தெரிந்தும் பல கணவன்கள் அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வதில்லை.
கணவரிடம் மனைவிக்குப் பிடிக்காத சில விஷயங்கள்,
1. குளித்தால், கை,கால், முகம் கழுவினால் ஈரம் சொட்ட, சொட்ட வந்து வீட்டையே ஈரமாக்குவது. மொசைக் தரையாக இருந்தால் அடுத்தவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே என்ற கவலை எல்லாம் கிடையாது. அப்படி வழுக்கி விழுந்து காலை ஒடித்துக் கொண்ட மனைவிகளும் உண்டு.
2. புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் புகைபிடிப்பது. அதிலும் ரயில் என்ஜின் மாதிரி வீட்டுக்குள்ளேயே புகைவிடுவது மனைவிகளை எரிச்சலின் உச்சத்திற்கே கொண்டு செல்லும். அந்த பாழாய்ப்போன சிகரெட்டை வெளியே சென்று பிடிப்பது.
3. காலையில் எழுந்தால் போர்வையை மடித்து வைக்கும் பழக்கமே இல்லை. நான் ஏன் மடிக்க வேண்டும் அதான் சம்பளம் இல்லாத வேலைக்காரி (மனைவி) இருக்கிறாளே என்ற நினைப்பு.
4. உடை மாற்றினால் அதை சோபாவிலோ, தரையிலோ அல்லது துவைத்த துணிகளுக்குடனோ போட்டுவிட்டுச் செல்வது.
5. நேரம் காலமில்லாமல் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது. கணவனுக்கு இது பிடிக்குமே என்று ஆசையாக சமைத்தால் உடனே நண்பர்களை சாப்பிட வரச் சொல்வது.
6. எங்கம்மா எவ்வளவு நல்லா சமைப்பாங்க தெரியுமா, என் அக்கா எப்படி பம்பரமா வேலை பார்ப்பா தெரியுமா என்று புராணம் பாடுவது.
7. வெளியே அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதை மறந்துவிடுவது.
8. நேரம் போவதே தெரியமால் அலுவலகத்தை கட்டி அழுவது.
9. ஏதாவது ஆசைப்பட்டு கேட்டால் அது உடல்நலத்திற்கு கேடு என்று கூறி வாங்கித் தர மறுப்பது.
10. அலுவலகப் பிரச்சனைகளால் மண்டகாஞ்சுபோய் வீட்டுக்கு வந்து மனைவியை திட்டுவது.
என்ன ஆண்களே இந்த விஷயங்களை மாற்றிக் கொண்டு உங்கள் மனைவியிடம் பாராட்டு பெறுவீர்களா?
Post a Comment