தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வரலாறு காணாத அவமானத்தை சந்தித்துள்ளது. தனது 2வது இன்னிங்ஸில் 47 ரன்களில் சுருண்டு கேவலப்பட்டுள்ளது ஆஸ்திரேலியா. இருப்பினும் டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோர் என்ற மகா கேவலமான நிலையை எட்டாமல் அது தவிர்த்து தப்பியுள்ளது.
கடந்த 109 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள 4வது மிகக் குறைந்த ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது இரு அணிகளும் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 284 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ஸ்டெயின் 4, அறிமுக வேகப் பந்து வீச்சாளர் பிலான்டர் 3, மார்னி மார்க்கல் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலிய படு வேகமாக சுருட்டியது. இதனால் அந்த அணி 96 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியது. ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார்.
இதையடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது ஆஸ்திரேலியா,வலுவாக ரன் குவித்து தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த அந்த அணி முயற்சிக்கும் என்றுதான் ரசிகர்கள் நம்பியிருந்தனர். ஆனால் நடந்தது வேறு. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் பிலான்டர் சூறாவளியாக மாறி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து விட்டார்.
வெறும் 15 ரன்களை மட்டுமே கொடுத்த பிலான்டர் 5 விக்கெட்களைச் சாய்த்து ஆஸ்திரேலியாவை அலறடித்தார். மார்க்கல் தன் பங்குக்கு 3 விக்கெட்களை வீழ்த்த, ஸ்டெயின் 2 விக்கெட்களைச் சாய்க்க ஆஸ்திரேலியா வெறும் 47 ரன்களில் சுருண்டு போனது.
கடை நிலை ஆட்டக்காரர்களான சிடிலும், லியானும் மகா பொறுமையுடன் ஆடியதால் மிக மோசமான ஸ்கோரில் சுருண்டு போகும் அபாயத்திலிருந்து தப்பிப் பிழைத்தது ஆஸ்திரேலியா.
இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது. நேற்றையே 2வது நாள் ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
கேவலப்படுவது முதல் முறையல்ல
ஆஸ்திரேலிய அணி இவ்வாறு மிகக் குறைந்த ஸ்கோரில் சுருளுவது இது முதல் முறையல்ல, மாறாக 4வது முறையாகும். இதற்கு முன்பு 1902ம் ஆண்டு அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது 36 ரன்களில் சுருண்டது.
1896 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி தலா 30 ரன்கள் எடுத்து மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்துள்ள பெருமை நியூசிலாந்திடம் உள்ளது. 1955ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது அது எடுத்த 26 ரன்கள்தான் இன்றுவரை மிகக் குறைந்த ஸ்கோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 23 விக்கெட்கள்
நேற்று ஒரே நாளில் மட்டும் 23 விக்கெட்கள் கேப்டவுந் மைதானத்தில் விழுந்தன. அதில் 22 விக்கெட்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரு அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் இருவர் அடுத்தடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியதும் டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
மேலும் இரு அணிகள் தங்களது இன்னிங்ஸ்களில் 100 ரன்களுக்கும் குறைவாக அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டது டெஸ்ட் வரலாற்றில் இது 9வது முறையாகும்.
மொத்தத்தில் நேற்றைய நாள் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு கருப்பு நாளாக அமைந்தது. 11-11-11 ஆகிய இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு புதிய வரலாறு படைக்கும் நாளாக அமையப் போகிறது.
Post a Comment