கூடங்குளம் அணு மின் நிலையத்துக்காக பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிடும் சில பெரியவர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவையும், தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கையையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாக தாக்கியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது சமீபத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அப்துல் கலாமை மறைமுகமாக அவர் விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
தமிழகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று விஞ்ஞானத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு சில பெரியவர்கள் பக்கம்பக்கமாக அறிக்கை கொடுத்து வருகிறார்கள்.
இதற்காக கரிகாலன் கட்டிய கல்லணை பாதுகாப்பாகத்தானே இருக்கிறது என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்படி அணு மின் நிலையத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பெரிய மனிதர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தை கண்டிப்பதில்லை. தமிழகத்துக்காக குரல் கொடுப்பதில்லை. இலங்கை கடற்படையினரால் இதுவரை 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்தும் அந்த பெரியவர்கள் கருத்து தெரிவிப்பதில்லை
தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து மின்சாரம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு அறிவித்துள்ளது என்றார் வைகோ.
Post a Comment