சென்னை: கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தைத் தயாரிக்க நடிகை புவனேஸ்வரி ரூ 1 கோடி கடன் கொடுத்துள்ளார்.
இந்தப் பணம் திருப்பித் தரப்படாததால், அதன் தயாரிப்பாளர் சம்பூர்ணம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் புவனேஸ்வரி.
தமிழ் சினிமா ஆயுசுக்கும் மறக்கமுடியாத நடிகை புவனேஸ்வரி. இவரை சில ஆண்டுகளுக்கு முன் விபச்சார வழக்கில் போலீசார் கைது செய்ய, அதை செய்தியாக வெளியிட்ட பத்திரிகைகள் மீது திரையுலகம் பாய்ந்தது. அதன் தொடர்ச்சியாக சினிமாவும் பத்திரிகையுலகமும் மோதியது நினைவிருக்கலாம்.
அதன் பிறகு ஜாமீனில் வந்த புவனேஸ்வரி சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவும் பைனான்ஸ் பண்ணவும் ஆரம்பித்துள்ளார். அப்படி அவரிடம் பைனான்ஸ் பெற்று தயாரான படம் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்.
படம் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் தயாரிப்பாளர் புவனேஸ்வரிக்கு தரவேண்டிய பணத்தை தரவில்லையாம்.
எனவே சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார் புவனேஸ்வரி. அதில், "கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' சினிமா தயாரிப்பாளர் சம்பூர்ணம் என்னிடம் படம் தயாரிப்பதற்காக ரூ.1 கோடி கடன் வாங்கி இருந்தார். இந்த தொகையை படம் வெளியிடுவதற்கு முன்பு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்து முத்திரை தாளில் எழுதிக் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் 'கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' படம் விரைவில் வெளியிடப்படுவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்ததும் தயாரிப்பாளர் சம்பூர்ணத்தை தொடர்பு கொண்டு கடன் தொகையை திருப்பி செலுத்தும்படி கேட்டேன். ஆனால் தயாரிப்பாளர் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.
எனக்கு சேர வேண்டிய கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை என்றால் நான் மிகவும் பாதிக்கப்படுவேன். ஆகவே கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு கோர்ட்டு அவருக்கு உத்தர விட வேண்டும்," என்று கூறியுள்ளார்.
மனுவை சென்னை 17-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சரவணன் விசாரித்து தயாரிப்பாளர் சம்பூர்ணத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். படம் வெளியாக ஏற்கெனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment