இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் காணப்படும் மீன்பிடித்துறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் உறுதியளித்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ரஞ்சன் மாத்தாய் விஜயத்தை முடித்துக் கொண்டு இந்தியாவிற்குச் சென்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். மீனவர்கள் பிரச்சினை குறித்து மீனவர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருவதற்கு முன்னர் தமிழக முதலமைச்சரை சந்தித்த ரஞ்சன் மாத்தாய் மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். கடற்பரப்பில் இருநாட்டவர்களும் அமைதியை கடைபிடிக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றமைக்கு மத்திய அரசு இலங்கைக்கு கண்டம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் சீன மீனவர்கள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கையை இலங்கை குறித்தும் இந்திய மத்திய அரசு எடுக்க வேண்டும் என ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
Post a Comment