சத்தியமூர்த்தி பவனில் உள்ளாட்சி தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேர்தல் அறிக்கையை வெளியிட, அதை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார். பின்னர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி நமது நாட்டுக்கு தந்த உன்னதமான திட்டம் பஞ்சாயத்து ராஜ். உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கே முழு அதிகாரம் என்பது இதன் சிறப்பு. பஞ்சாயத்து ராஜ் முறை இந்தியா முழுவதும் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை "பஞ்சாயத்து ராஜ்" சட்டம் முழுமையாக செயல்படுத்தப் படவில்லை. மற்ற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.
தேவைப்பட்டால் தமிழ் நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தும். மத்திய, மாநில அரசுகளைப்போல பஞ்சாயத்து அமைப்புகளும் தனி அதிகாரம் பெற்றவை. மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு அமைச்சருக்குரிய அந்தஸ்து உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அதிகாரங்களை அதிகாரிகளே வைத்து இருக்கிறார்கள். அடிப்படை உரிமைகளை வழங்கவில்லை. மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோம்.
இனி தமிழ்நாட்டில் காங்கிரஸ் பஞ்சாயத்து முதல் பாராளுமன்ற வரை தனித்தே போட்டியிடும். பல ஆண்டுகளாக காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். இப்போது அது நிறைவேறி இருக்கிறது.
திருச்சி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதற்காகவே, காங்கிரஸ் போட்டியிடவில்லை.மத்திய தேர்தல் ஆணையத்தைப் போல மாநில தேர்தல் கமிஷனும் தனி அமைப்பாக செயல்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும்.
மாநில தேர்தல் ஆணையம் இதை செயல்படுத்தும் என்று நம்புகிறோம். நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம், கூடுதல் நிதி, நேர்மையான ஊழல் இல்லாத நிர்வாகம், மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம் அமைய காங்கிரஸ் பாடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கிருஷ்ண சாமி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ, நிர்வாகி கள் தாமோதரன், மக்புல் ஜான், சிவலிங்கம், தமிழ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment