News Update :
Home » » வேதனை அல்ல வியப்பு அடைந்தேன்! * ஹர்பஜன் சிங் ஆவேசம்

வேதனை அல்ல வியப்பு அடைந்தேன்! * ஹர்பஜன் சிங் ஆவேசம்

Penulis : karthik on Wednesday, 12 October 2011 | 23:02

 

புதுடில்லி: "இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட போது என் மனம் வேதனைப்படவில்லை. மாறாக வியப்பு தான் ஏற்பட்டது," என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு "டுவென்டி-20′ போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை ஐதராபாத்தில் நடக்கிறது. முதலிரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அனுபவ சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டார். சமீப காலமாக விக்கெட் வீழ்த்த திணறியதால் தான், தேர்வாளர்கள் இம்முடிவை எடுக்க நேர்ந்தது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது மனவேதனை அளிக்கவில்லை. மாறாக, வியப்பு தான் ஏற்படுத்தியது. எனது "பார்ம்' குறித்து வீணாக விமர்சிக்கின்றனர். பொதுவாக, ஒருநாள் போட்டியில் பவுலர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது தவறு. ஏனெனில், ஒவ்வொரு போட்டியிலும் 10 ஓவரில் 5 விக்கெட் எடுப்பது கடினம். மாறாக, எதிரணியின் ரன் வேட்டையை தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கலாம். குறைந்த ஸ்கோர் எடுத்த போட்டிகளில், பவுலர்கள் அதிக விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
சமீபத்தில் ஆன்டிகுவாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 10 ஓவரில் வெறும் 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினேன். இப்போட்டியில் பேட்டிங்கில் 41 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டேன். எனவே எனது "பார்ம்' குறித்து வரும் சர்ச்சைகள் குறித்து கவலைப்பட போவதில்லை. கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த அளவு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.
இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இளம் வீரர்களுடன், எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான காலகட்டத்தில், சச்சின், கங்குலி, கும்ளே உள்ளிட்ட சீனியர் வீரர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கினர். இவர்களது ஆலோசனைகள், போட்டியில் சாதிக்க உதவியது.
பழிதீர்க்குமா?:
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறேனா என்பது முக்கியமல்ல. இங்கிலாந்து மண்ணில் சந்தித்த தோல்விக்கு இந்திய வீரர்கள் இம்முறை பழிதீர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இத்தொடருக்கு திறமையான இளம் மற்றும் அனுபவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதால், இங்கிலாந்து அணியை வீழ்த்தி பதிலடி கொடுப்பார்கள் என நம்புகிறேன். டெஸ்ட் அரங்கில், "நம்பர்-1′ இடத்தை அடைய, இந்திய வீரர்கள் கடுமையாக போராடினர். சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் இழந்த முதலிடத்தை, மீண்டும் கைப்பற்றும் வரை இந்திய வீரர்கள் ஓய்வில்லாமல் போராட வேண்டும்.
மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடரில், எனது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், கோப்பை வென்றிருப்பது உற்சாகமாக உள்ளது. "டுவென்டி-20′ போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது சுலபமான காரியமல்ல. ஏனெனில் ஒவ்வொரு பந்தின் முடிவிலும் புதிய முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger