ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில் அன்னா ஹஸாரேவும் அவரது கோஷ்டியினரும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்துள்ளதாக கருத்து எழுந்துள்ளது. இதையடுத்து அவரை ஆதரித்தவர்களில் பலரும் அவரை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
ஹஸாரே எங்கள் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டார் என்றும், ஹஸாரே ஒரு நம்பிக்கை துரோகி, அரசியல் புரோக்கர் என்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையத் தளங்களில் எதிர்ப்புக் கருத்துக்களை அவரது ஆதரவாளர்களே வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார் என அவர் மீது நம்பிக்கை துரோக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான போர் என்ற பெயரில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது நாடே அவருக்கு ஆதரவாகத் திரண்டது. ஜந்தர் மந்தரில் நடந்த முதல் போராட்டத்துக்கு பிரமாண்ட ஆதரவு கிடைத்தது. அடுத்து, ராம்லீலா மைதானத்தில் அவர் 12 நாட்கள் தண்ணீரை மட்டும் பருகி, உண்ணாவிரதம் இருந்தார். இந்தப் போராட்டம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தாலும், அவருக்கு ஆதரவு பெருகியது.
ஒரு நல்ல நோக்கத்துக்காக இவராவது போராட முன்வந்தாரே என்பதால் அவருக்கு ஆதரவு பெருகியது. பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக இணைய தளங்களிலும் அவருக்கென தனி பக்கங்களைத் தொடங்கி, I'm with Anna, என்ற கோஷத்தை முன்வைத்தார்கள்.
இன்று அவர்களில் பெரும்பாலானோர் அன்னா ஹஸாரேவை மிகக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
காரணம், அன்னாவின் ஒருதலைப்பட்சமான அரசியல் நிலைப்பாடு. ஊழலுக்கு எதிரான போர் என்று அவர் மக்களிடம் திரட்டிய அபரிமிதமான ஆதரவை அப்படியே பாஜகவுக்கு திருப்பி விட அன்னா முயல்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ஊழல் என்று வந்துவிட்டால், அதில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே வித்தியாசம் இல்லை. காங்கிரஸாவது, அன்னாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாகச் சொன்னது. ஆனால் அதற்கான அவகாசமே கொடுக்காமல் அன்னா பாஜகவுக்கு ஓட்டுப் போடுமாறு பிரச்சாரம் செய்வது, அவரது உண்மையான நோக்கத்தைக் காட்டிவிட்டது என அன்னா ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹஸாரேவை நம்பி அவருக்கு ஆதரவளித்து, இப்போது அவரது அரசியல் நிலைப்பாட்டால் வெறுத்துப் போன பலரும் 'fed up with Anna' எனும் பெயரில் பேஸ்புக்கில் தனி பக்கம் ஆரம்பித்துள்ளனர். இந்தப்பக்கம் ஆரம்பிக்கப்பட்ட சில நொடிகளில் நூற்றுக்கணக்கானோர் அன்னாவைத் திட்டியடி, இந்த குழுவில் இணைந்துவிட்டனர்.
ஊழலை மட்டுமல்ல, அன்னாவையும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களையும் கடுமையாக எதிர்ப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு அன்னா துரோகம் செய்துவிட்டார் என்றும், அரசியல் தரகரைப் போல உள்ளது அவரது செயல்பாடு என்றும், தாங்கள் அளித்த ஆதரவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் என்றும் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை துரோகம்- அன்னாவுக்கு நோட்டீஸ்:
இதற்கிடையே, அன்னா மீது நம்பிக்கை துரோக வழக்கு தொடர்ந்துள்ளார் குரு கோவிந்த் சிங் இந்திரப் பிரஸ்தா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலும் மாணவர் வினோத் ஆனந்த். இது தொடர்பாக அன்னாவுக்கும் அவரது குழுவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராகப் போராடுவதை விட்டுவிட்டு ஒரு தனிப்பட்ட கட்சியை மட்டும் எதிர்த்து போராடுவதன்மூலம் இந்தியர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டார்கள் என்றும், நாட்டு மக்களை அன்னா ஹசாரேவும் அவரது குழுவினரும் தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே குழுவினர் மீது குற்ற நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று கேட்டு உள்துறை அமைச்சகம், டெல்லி போலீஸ் கமிஷனர், ஹரியானா டிஜிபி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Post a Comment