லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் மீது மேட்ச் பிக்சிங் புகார் எழுந்துள்ளது. இதனால் கிரிக்கெட் உலகில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டை உலுக்கி எடுத்த ஸ்பாட் பிக்சிங் விவகாரம் அம்பலத்திற்கு வர முக்கியக் காரணம் மஜார் மஜீத் என்ற பெரும் பணக்கார புரோக்கர்தான். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட், முகம்மது உள்ளிட்ட மூவர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது தொடர்பான புகாரைக் கூறியதோடு வீடியோவையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து மூவரும் பாகிஸ்தான் அணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு லண்டன் சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
தற்போது சல்மான் பட், ஆசிப் மீதான வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இதன் நான்காவது நாள் விசாரணையின்போது மேலும் சில குண்டுகள் வீசப்பட்டன. இதை வீசியவர் மசார் மகமூது என்ற பத்திரிக்கையாளர். இவர் ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளர். இவர் கூறுகையில், மஸார் மஜீத் என்னிடம் பேசுகையில், கிரிக்கெட் உலகின் பிரபலங்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல், பிரட் லீ, ரிக்கி பான்டிங் ஆகியோருடன் தனக்குத் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட்டுடன் தான் பேசியதாகவும் கூறினார். 2010 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது பாகிஸ்தான் அணி ஒரு, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை விட்டுக் கொடுக்க முன்வந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் பாகி்ஸதான் முன்னணி வீரர்கள் சிலரும், சில ஆஸ்திரேலிய வீரர்களும் போட்டியை விட்டுக் கொடுக்க முன்வந்ததாகவும் மஜீத் தெரிவித்தார் என்று மஹமூத் தெரிவித்தார். மேலும், விசாரணையின்போது ஒரு வீடியோ ஒன்றையும் அவர் போட்டுக் காட்டினார். அதில் காரில் இருந்தபடி மஜீத் பேசுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, முதல் நாள் ஆட்டத்தின்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் மஜீத் கூறுகையில், தாங்கள் பங்கேற்கும் போட்டியில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் பெட்டிங் செய்யலாம் என ஆஸ்திரேலிய வீரர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார் மஜீத். இதற்கு பிராக்கெட் என்று பெயர். ஒரு போட்டிக்கு 10 பிராக்கெட் வரை ஆஸ்திரேலியர்கள் தயாராக உள்ளனர்.
ஒரு பிராக்கெட்டுக்கு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பவுண்டு வரை செலவாகும். இதுவே டுவென்டி 20 போட்டிக்கு 4 லட்சமாகவும், டெஸ்ட் போட்டிகளில் 10 லட்சம் பவுண்டு வரையும் ஆகும் என்று மஜீத் கூறியுள்ளார்.
அந்த வீடியோல் மஜீத், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி குறித்தும் பேசியுள்ளார். அவருடன் தான் இணைந்து செயல்பட விரும்பவில்லை என்றும் மஜீத் தெரிவித்துள்ளார். ஒரு ஆபாசமான வார்த்தையைக் கூறி அவரிடம் போய் எப்படி பணியாற்றுவது என்று தெரிவித்துள்ளார் மஜீத்.
இந்த பரபரப்பு புகாரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உடனடியாக மறுத்துள்ளது. மஜீத் யார் இந்தப் புகார்களைச் சொல்ல. அவருக்கு என்ன அருகதை உள்ளது. தகுதியே இல்லாத ஒருவர் ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்துப் புகார் கூறுவதை ஏற்க முடியாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் முன்னணி வீரர்களாக அசாரூதீன், அஜய் ஜடேஜா உள்ளிட்டோர் மீது கிரிக்கெட் சூதாட்ட புகார் எழுந்தது. இதன் விளைவாக அசாருதீனுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் மீது சூதாட்டப் புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment