நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், விதிமுறைகளை மீறி, பிஎட் படிப்பில் 523 மாணவர்களை கூடுதலாக சேர்த்தது தணிக்கை குழு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் பிஎட் படிப்பில் மாணவர் சேர்க்கை, தனியார் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஓப்பந்தம் உள்ளிடவற்றில் சுமார் ரூ.1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தொலை தொடர் கல்வி இயக்குனர் ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.
இது தொடர்பான ஆவணங்களையும் அரசு சட்டத்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட பல்கலை கண்காணிப்பு கமிட்டியிடம் சமர்ப்பித்தார்.
ஊழல் தொடர்பான ஆவணங்களை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குனரின் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தி்ல் இருந்து முதுநிலை தணிக்கையாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் தணிக்கை அதிகாரிகள் செல்வி, அழகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பல்கலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 4 வருடங்களாக அலுவலக கோப்புகள், வங்கி கணக்கு, பண பரிவர்த்தனை, மாணவர் சேர்க்கை பதிவேடு உள்ளிட்டவற்றை அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் பிஎட் மாணவர் சேர்க்கையில் ஊழல் நடத்திருப்பதை தணிக்கை குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 2009-2010 கல்வியாண்டில் நெல்லை பல்கலையில் தொலைநெறி வழியில் பிஎட் படிப்பை வழங்க என்சிடிஇ அனுமதி அளித்துள்ளது. அந்த ஆண்டில் என்சிடிஇ விதிமுறைப்படி 500 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். 2010-2011 கல்வியாண்டில் பிப்ரவரி மாதம் 523 பேரும், நவம்பர் மாதம் 500 பேரும் பிஎட் படிப்பி்ல் சேர்க்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தணிக்கை குழுவினர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஒரு கல்வியாண்டில் 500 பேர் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறி கூடுதலாக சேர்க்கப்பட்ட 523 பேருக்கு எப்படி பட்டம் வழங்குவது, அவர்களின் எதிர்காலம் என்ன, என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இன்றும் (14ம்தேதி) தணிக்கை குழு ஆய்வு தொடர்கிறது. ஆய்வின் முடிவில்தான் ஊழல் தொடர்பான முழுவிபரங்களும் தெரிய வரும் என பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பல கோடி முறைகேடு தொடர்பான சர்ச்சையால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Post a Comment