சென்னை: கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை மிரட்டிய நடிகை புவனேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து 1 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு கே. கே. நகர் போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள கே. கே. நகரைச் சேர்நதவர் குருநாதன். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
டி.வி. தொடர்களில் நடித்து வருவதாக நடிகை புவனேஸ்வரி என்னிடம் தெரிவித்தார். மேலும் டி.வி. தொடர்களை அவரே தயாரித்து வெளியிட இருப்பதாகவும், அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.
இதற்காக ரூ.1.50 கோடி தொகையை கடனாக தரவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். எனவே நான் அவர் கேட்ட தொகையை வழங்கினேன்.
ஆனால் அவர் டி.வி. தொடர் எதையும் தயாரிக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். எனவே கடனாக கொடுத்த தொகையை திருப்பிக்கேட்டேன். இதனால் என்னை அவர் ஆள்விட்டு மிரட்டினார்.
இதுபற்றி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தேன். எனது புகாரின் அடிப்படையில் புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். கடன் தராமல் மிரட்டல் விடுத்த அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் இது குறித்து இன்னும் 1 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று கே. கே. நகர் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
Post a Comment