மூணாறு தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்ட ஷமிலாவின் தந்தை பெயர் சுந்தரம். மதுரையை சேர்ந்த இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் ஈரோடு வந்தார். ஈரோடு திருநகர் காலனி, சாமியப்பா வீதி பகுதியில் குடியிருந்து சுந்தரம், ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
ஈரோட்டில் சுந்தரம் குடும்பத்துடன் இருந்தபோது ஷமிலாவும், அவருடை தங்கை ஷாலினியும் ஈரோடு திருநகர் காலனியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 வரை படித்தனர். 2004-ம் ஆண்டு பிளஸ்-2 படிப்பை ஈரோட்டில் முடித்த ஷமிலா, பின்னர் மதுரையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார்.
2006-ம் ஆண்டு ஷாலினி பிளஸ்-2 முடித்த பின்னர், சுந்தரம் குடும்பத்துடன் மதுரை திருமங்கலத்தில் குடியேறினார். அங்கு சென்ற ஒரு சில மாதங்களிலேயே உடல் நலம் குன்றி சுந்தரம் இறந்து விட்டார். தாயார் ராணி தனது மகள்களை கவனித்துக்கொண்டார். இதற்கிடையே பட்டப்படிப்பை முடித்த ஷமிலா பெங்களூரில் ஒரு கம்ப்ïட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போதுதான், மகேஷ்குமாருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்டாலும் ஷமிலா, தாய் ராணி தங்கை ஷாலினி ஆகியோருடன் தொடர்பிலேயே இருந்தார். இந்த நிலையில் ஷமிலா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
சிறுவயதில் இருந்தே ஷமிலாவையும் மற்றும் ஷாலினியையும் எங்களுக்கு நன்றாக தெரியும். மிக நல்ல குடும்பத்து பெண்கள். ஷமிலாவை பற்றி, இப்போது வந்துள்ள தகவல்கள் எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷமிலா அப்படிப்பட்ட பெண்ணாக இருந்து இருக்க முடியாது. அவர் காதல் திருமணம் செய்தவர் என்பது மட்டும்தான் உண்மை. கடந்த 4 மாதங்கள் முன்பு வரை அவர்கள் வாழ்க்கை மிகவும் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.
4 மாதங்களுக்கு முன்பு, ராணியின் பெயரில் தபால் நிலையத்தில் இருந்த ஒரு கணக்கை முடித்து பணம் பெறுவதற்காக ஷாலினி வந்திருந்தார். அப்போது அக்காவின் கணவர் அடிக்கடி பிரச்சினை செய்து அவளை துன்புறுத்துவதாக தெரிவித்தாள். சில மாதங்களுக்கு முன்பு மகேஷ்குமாரை விட்டு பிரிந்து ஷமிலா ஒரு மாதம் ஷாலினியுடன் வந்து தங்கி இருந்தார். பின்னர் மீண்டும் மகேஷ்குமார் வந்து அழைத்துச் சென்றார்.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஷமிலா திருமங்கலத்தில் அம்மா ராணி வீட்டில்தான் தங்கி இருந்தார். அப்போது அங்கு வந்த மகேஷ்குமார், ஷமிலாவிடம் சமாதானம் பேசினார். பின்னர், மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஏதாவது கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி இருக்கிறார். அதற்கு ஷமிலா ஒப்புக்கொண்டார். உடனே கோவையில் உள்ள மருதமலை கோவிலுக்கு சென்று வரலாம் என்று அழைத்துச்சென்றார்.
ஆனால், மூணாறுக்கு கூட்டிச்சென்று மகேஷ்குமார் கொலை செய்து இருக்கிறார். எனவே மகேஷ்குமார் திட்டமிட்டுதான் ஷமிலாவை கொலை செய்து உள்ளார். இந்த பழியில் இருந்து தப்பிக்க போலீசாருக்கும் பெற்றோருக்கும் பொய்யான கடிதங்களை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து இருக்கலாம். இவ்வாறு திருநகர் பகுதியில் ஷமிலாவுடன் பழகிய குடும்பத்தினர் தெரிவித்தார்கள்.
மகேஷ்குமாரின் கடிதம் ஷமிலாவைப் பற்றிய ஒரு கருத்தை ஏற்படுத்தி இருக்க... அவரோடு சிறு வயது முதல் பழகியவர்கள் கூறி இருக்கும் கருத்து வேறு விதமாக இருப்பதால், இதுபற்றி போலீசார் முழுமையாக விசாரணை செய்ய தீர்மானித்து இருக்கிறார்கள்.
Post a Comment