அப்பா எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கே குழந்தையாக பிறக்க விரும்புகிறேன் என்று தற்கொலை செய்துகொள்ளும் முன்பு மகேஷ்குமார் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
மூணாறில் சென்னையைச் சேர்ந்த பெண் ஷமீலாவை கொலை செய்த அவரது கணவர் மகேஷ்குமார் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு ஒரு நோட்டில் 21 பக்கத்திற்கு தந்தை சுப்பிரமணியன், தாய் அமிர்தம், தங்கை பிரபா, மைத்துனர் ஈஸ்வரன் ஆகியோருக்கு உருக்கமான கடிதம் எழுதி அந்த நோட்டை தன் வீட்டு குளியலறையில் வைத்திருந்தார். இது தவிர போலீசாருக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
தனது குடும்பத்தாருக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
அப்பா... கடந்த 10 ஆண்டுகளாக நான் உங்களை இவ்வாறு கூப்பிட்டது இல்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க கிட்ட பேசணும்னு நிறைய முறை நினைத்தேன். ஆனால், பேச முடியவில்லை. உங்ககிட்ட ஒன்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. பரவாயில்லை, இப்போது எழுத்து மூலம் சொல்லி விடுகிறேன்.
வாழ்க்கையில் நான் இப்படி கஷ்டப்பட நீங்கள் காரணம் இல்லை. எல்லாம் நான் பிறந்த நேரம், விதிதான். நீங்கள் எதுவும் வருத்தப்பட வேண்டாம். அடுத்த ஜென்மத்திலேயும் உங்களுக்கு குழந்தையாக பிறப்பேன். உங்களோட அன்பை முழுமையாக பெற "பெண் குழந்தையாக'' பிறப்பேன். இந்த ஜென்மத்தில் இதுவரைக்கும் ஒரு நல்ல பொறுப்பான பையனாக உங்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை. அடுத்த ஜென்மத்தில் உங்களை நன்றாக பார்த்துக்கொள்வேன். என்னை மன்னிச்சுடுங்க அப்பா...
அம்மா... உங்களுக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. சத்தியம் செய்து கொடுக்கும்போதே தெரியும். ஏன்னா நீங்க எங்கிட்ட, நான் எதுவும் தவறான முடிவை எடுத்து விடக்கூடாது என்று கேட்டு இருந்தீங்க. ஆனால் வேறு வழியில்லை. என்னை முழுசா புரிந்து கொண்டது நீங்கள்தான். அம்மாவை பிடிக்காமல் யாராவது இருப்பார்களா? என்னோட நேரம், எல்லாம் இருந்தும் தனியா இருந்தேன்.
நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டபோது கூட எங்கள ஏங்க விடாம பார்த்துக்கொண்ட உங்கள் தாய்மைக்கும், அன்புக்கும் நான் எப்பவும் அடிமை. பக்கத்து வீட்டில் உனக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தாலும் அத எங்களுக்கு கொண்டு வந்து தரும் அன்பு என் அம்மாவை தவிர யாருக்கு வரும். எனக்கு ஏதாவது சந்தோஷமாக இருந்தாலோ, நீ நல்லா இருந்தாலோ என்னை பக்கத்துல கூப்பிட்டு வெச்சு கன்னத்துல முத்தம் வைக்கணும்னு ஆசை. (இப்ப வெச்சுக்கிறேன் அம்மா) உம்மா...
பிரபா... நீ என்னுடைய தங்கச்சியா இருந்தாலும் தங்கச்சின்னு அதிகம் கூப்பிட்டது இல்லை. உன்னை நினைத்தாலே என் கண்கள் கலங்கி விடுகிறது. இதை எழுதும்போதுகூட எழுத முடியாமல் அழுது கொண்டு எழுதினேன்.
இந்த ஜென்மத்தில் நம்மால் முழுமையாக அண்ணன், தங்கையாக பாசத்தையோ, அன்பையோ பரிமாறிக்கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்து விடு. நீ தான் என்றென்றும் என் தங்கை.
மச்சான்... என்னால் உங்களுக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தாச்சு. இனி அது இருக்காது. உங்க பேச்சை மீறிதான் நான் இந்த தப்பை செய்யுறேன். வேற வழியில்லை மச்சான். என்னால் ஷமிலா இல்லாமல் இருக்க முடியாது அதான். உங்கள விட்டு நான் இப்படி பாதியில் போறதுக்கு என்னோட வாழ்க்கைப் பயணம் முடியும் நேரம் வந்தாச்சு. அவ்வளவுதான் என்னை மன்னிச்சுடுங்கோ.
வாழ்ந்தால் மரியாதையோடும், மானத்தோடும், நாலுபேர் பாராட்டுகிற மாதிரி கம்பீரமாக சந்தோஷமாக வாழ வேண்டும். அந்த வாழ்க்கை எனக்கு அமையவில்லை. நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் முடியவில்லை. அதுக்காக ஷமிலாவிடம் எத்தனையோ முறை விட்டுக்கொடுத்து எல்லாத்தையும் மன்னித்து, கெஞ்சி, மிரட்டி அழுதுகூடப் பார்த்தேன். ஆனால் முடியவில்லை.
சாப்பிட்டு போட்ட எச்சில் இலை மாதிரி தூக்கி வீசிட்டு போய்ட்டா மாமா. நன்றி மறந்து விட்டு, வேறு உலகத்துக்கு போய்ட்டா. தொடர்ந்து அவமானப்பட்டு முட்டி, மோதி என் மனைவியை என் பக்கம் திருப்ப நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுவிட்டேன். ஏனென்றால் என்ன இருந்தாலும் தப்பை உணர்ந்து அவள் வந்து விடுவாள் என்று நினைத்தேன். அவளுக்கு பிடிச்ச விஷயங்களை சென்னையிலேயே அவ்வப்போது தீர்த்து வைத்துக்கொண்டு இருந்தேன்.
புத்தியை மாத்தி வச்சிருக்காங்களோ என்று நினைத்து கோவிலுக்கு கூட்டி போய் மாந்திரீகம் செய்து விட்டுக்கூட வந்தேன். ஆனால் என்கிட்ட பொய் சொல்வதே அவளுக்கு வாடிக்கையாக இருந்து விட்டது. ஒவ்வொரு நிமிடமும் இந்த நிமிடம் அவள் மாறிவிட மாட்டாளா?, பழைய நினைவுகளை தூக்கிப்போட்டுவிட்டு வரமாட்டாளா? என்று ஏங்குவேன். ஆழமா போய் விட்டதால் அவள் வர விரும்பவில்லை.
3 அல்லது 4 நாட்கள் சுற்றுலா கூட்டிட்டு போய் எனது காதலை உணர்வுப்பூர்வமாக பக்கத்தில் இருந்து அவளுக்கு காட்டினால் திருந்த வாய்ப்பு இருக்குமோ? என்று நினைத்துதான் மூணாறுக்கு செல்ல முடிவு செய்தேன். அதனால் தான் மூணாறு சென்றோம். இதுல திருந்தி வாழ்ந்தால் வாழலாம். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
அவள் திருந்தி மனம் மாற வேண்டும் என்பதற்காக எல்லாம் செய்தேன். பல்வேறு இடங்களுக்கு கூட்டிச் சென்றேன். அவளும் சந்தோஷமாக இருந்தாள். அவள் மனதில் உண்மையாக எந்த வித மாற்றமும் வரவில்லை. பழைய ஷமிலா எனக்கு கிடைக்கவில்லை. ஒரு வாய்த் தகராறில் இப்படி ஆகிவிட்டது.
ஒரு தாய் எப்படி தன் குழந்தையை கொன்று விட்டு பின்பு அவளும் மாய்த்துக்கொள்வாளோ அப்படித்தான் இதுவும். என் குழந்தையை விட்டு செல்ல மனம் இல்லை.
இதோ நான் செல்கிறேன் இப்போது... இது இன்று நேற்று எடுத்த முடிவு இல்லை. நாங்கள் காதலிக்கும்போதே எடுத்த முடிவு. எனக்கு வாழ்க்கை, கனவு, லட்சியம், ஒரே ஆசை எல்லாம் எனது மனைவி ஷமிலா தான். அவள்தான் என்னுடைய உலகம். ஷமிலாவை என் உடலில் இருந்தோ, மனதில் இருந்தோ பிரிக்க முடியாது. ரத்தத்தோட ஊறிய விஷயம். இது அவளுக்கே நல்லா தெரியும். ஏன்னா நான் அவளுக்காகவே வாழ்ந்தவன்.
அவளோட ஆசைதான் என்னுடைய ஆசை. அவளுக்கு பிடித்ததுதான் எனக்கும் பிடிக்கும். எனக்கென்று எதுவும் இல்லாமல் அவளுக்காக 6 வருடமாக வாழ்ந்துவிட்டேன். இப்போது திடீரென்று என்னை தனியாக வாழச் சொன்னால் என்னால் எப்படி முடியும். என்னால் ஷமிலாவை மறக்க முடியவில்லை. என் மூளை செயல் இழக்கும் வரைக்கும் ஷமிலாவுக்கு நான்தான் அப்பா, கணவன், காதலன் (4 மாதங்களுக்கு முன்பு வரைக்கும்).
அவ என்ன தப்பு செய்தாலும், அவமானப்படுத்தினாலும் அவள் மேல் எனக்கு கோபமே வராது. தெரியாம பண்ணுறா என்று தான் இருந்தேன். நான் வாழ்ந்தால் அது ஷமிலாவுடன் மட்டும் தான். என் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதுக்கு காரணம் ஷமிலாவாக தான் இருக்க வேண்டும். அது என் சாவுக்கும் கூட. என் வாழ்க்கை இப்படித் தான் கடைசி வரைக்கும். சோகம்... சோகம்... நானே முடிக்கிறேன் இந்த கதையை.
எங்கள் காதல் உண்மையானதுதான். அது என்றைக்கும் மாறாது. அவளால் தான் இந்த வாழ்க்கை கிடைத்தது. இப்ப அவளே அதை எடுத்துக்கிட்டா. எத்தனையோ நிமிடங்கள் இப்பவே செத்துப்போனாலும் பரவாயில்லைங்கிற அளவுக்கு வாழ்ந்து இருக்கிறோம். அத மனசுல வைச்சு சந்தோஷமா பிரிகிறேன். தயவு செய்து என் கையில் இருக்கிற கடிதத்தை போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். இதுதான் என்னுடைய கடைசி ஆசை.
ஷமிலாவை சாதாரணமாகவே பிரிய முடியாத என்னால், இப்பொழுது அவள் மண்ணில் இல்லை என்று தெரிந்தும் எப்படி இருக்க முடியும். துக்கமும், அழுகையும் தாங்கமுடியவில்லை. அதுதான் சென்னை போன காரியத்தை பாதில முடிச்சுட்டு, என் உயிர் என் சொந்த ஊர்ல போகனும்னு வந்துட்டேன் என்று அவர் அதில் குறிப்பிட்டு கடித்ததின் கீழ் ஷமிலா மகேஷ் என்று கையெழுத்திட்டுள்ளார்.
மனைவியைக் கொன்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிய மகேஷ் அங்குதூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து ஊரை திரண்டு போனது. ஆனால் மகேஷின் பெற்றோரும், தங்கையும் மட்டும் போகவில்லை.
ஆனால் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்ததும், தங்கையின் பிரசவத்திற்காக நண்பரிடம் ரூ. 60,000 கொடுத்து வைத்திருந்ததையும் அறிந்ததும் அவர்கள் பதறிப் போனார்கள். பாசம் உந்தித் தள்ள சுமார் 2 மணி நேரம் தாமதமாக போய் அவரது உடலைப் பார்த்து கதறினர்.
Post a Comment